வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ முயற்சியால் 28ம் தேதி நடக்கிறது ஆதி திருவரங்கம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

ரிஷிவந்தியம், ஜன. 24: வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ முயற்சியால் வரும் 28ம் தேதி ஆதி திருவரங்கம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி, வாணாபுரம் அடுத்த ஆதி திருவரங்கத்தில் மிகப் பழமை வாய்ந்த அரங்கநாயகி சமேத அரங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு திருப்பணி, புதிய மர தேர் மற்றும் புனரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என பல ஆண்டுகள் காலமாக கோரிக்கை வைத்து எவரும் நிறைவேற்றாத நிலையில், அப்பகுதி மக்கள் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனைப்படி, 2021-22ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ கோரிக்கை வைத்து பேசினார். அதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் இந்து சமய அறநிலைய துறை உயர் அதிகாரிகளுடன் இக்கோயிலை நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் திட்ட மதிப்பீடு தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதையடுத்து, அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து சன்னதி திருப்பணி, தெற்கு, மேற்கு மதில் அமைத்தல், புதிய தேர், தாயார் சன்னதி திருப்பணி, நெற்களஞ்சியம், தேர் கொட்டகை, பணியாளர் குடியிருப்பு, பசுமடம், நில எல்லைகள், இரண்டு புதிய கடைகள், புதிய அன்னதானக் கூடம், அலுவலக புதுப்பித்தல், உலோகத் திருமேணி, இடிதாங்கி, தங்கும் விடுதி, தேர்முட்டி மற்றும் மின் இணைப்பு, மடப்பள்ளி, கழிவுநீர் தொட்டி, உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் ரூ.12 கோடி செலவில் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், இக்கோயிலுக்கு, புதிய மர தேர் செய்ய ரூ.78.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரவு, பகல் பாராமல் முழுவீச்சில் பணிகள் நடைபெற்று நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து புதிய தேர் வெள்ளோட்டம் கடந்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி நடைபெற்றது. மற்ற பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து, தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான 27 அடி நீள நவபாஷாணத்தில் உருவாக்கப்பட்ட மூலவர் ரங்கநாதர் சன்னதி மற்றும் தாயார் ரங்கநாயகி சன்னதி, மூலவர் கோதண்டராமர், லட்சுமணர், சீதாபிராட்டி, பவ்ய ஆஞ்சநேயர் ஆகிய ஆலயம் பாலாலயம் விழா கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நடைபெற்றது,

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 3ம் தேதி வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ நேரில் சென்று கோயிலின் அனைத்து பகுதிகளிலும் பார்வையிட்டு ஆய்வு செய்தார், பின்னர் ஊர் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு மிக விரைவில் கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தற்போது நடைபெற்று வரும் கோயில் பணிகள் முறையாகவும் தரமாகவும் செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் அனைத்து திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று கோபுரம் மற்றும் சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணி, சுற்றுப்பகுதியில் கல் புதைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்தது.இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 28ம் தேதி காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ அழைப்பு விடுத்துள்ளார். அதனால் பொதுமக்கள், பக்தர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் தமிழக அரசுக்கு நன்றிகள் தெரிவித்தனர்.

Related Stories: