×

‘ஏஐ’ மூலம் உருவாக்கப்படும் ஆபாச படங்கள்; என் உடலின் அழகை திருடி அவமானப்படுத்துகிறார்கள்: பிரபல ஹாலிவுட் நடிகை கண்ணீர்

 

 

வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலி ஆபாச படங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பிரபல ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உருக்கமாகப் பேசினார். பிரபல அமெரிக்கத் தொழிலதிபர் மற்றும் நடிகையான பாரிஸ் ஹில்டன், கடந்த 2004ம் ஆண்டு தனது 19வது வயதில் காதலருடன் இருந்த அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியானதால் பெரும் அதிர்ச்சியடைந்தார். அந்தச் சமயத்தில் இணையதளம் புதிதாக இருந்ததால், தன்னை எல்லோரும் கேலி செய்ததாகவும், அது ஒரு ஊழல் என்று கூறினார்களே தவிர, அது தனக்கு நேர்ந்த கொடுமை என்பதை யாரும் உணரவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

அந்தச் சம்பவத்தால் தனது உடல் மற்றும் நற்பெயரின் மீதான கட்டுப்பாட்டை இழந்து, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்படும் போலி ஆபாச படங்களுக்கு எதிரான சட்டத்தை ஆதரித்து பாரிஸ் ஹில்டன் பேசினார்.
அப்போது அவர், ‘எனது அனுமதியின்றி ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எனது போலி ஆபாச படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன; இது உண்மையானது இல்லை என்றாலும், யாரோ ஒருவர் இதைப் பார்க்கிறார்கள் என்ற எண்ணமே எனக்குப் பயத்தை அளிக்கிறது.

8 பெண்களில் ஒருவர் இந்தத் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படுகிறார்கள்; எனது இரண்டரை வயது மகளைப் பாதுகாப்பதற்காகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவும் இந்தச் சட்டம் அவசியமானது’ என்று அவர் வலியுறுத்தினார்.

Tags : Hollywood ,Washington ,Paris Hilton ,US Parliament ,
× RELATED டிரம்பின் அமைதி வாரியத்தை...