சென்னை: திருவரங்கம் அரசு கல்லூரியில் ரூ.3 கோடியில் புதிய வகுப்பறைகள் அமைக்கப்படும் என உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் சட்ட சபையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, திருவரங்கம் தொகுதி உறுப்பினர் மொ.பழனியாண்டி பேசுகையில், திருவரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் உள் கலையரங்கம் அமைக்க அரசு முன்வருமா? என்றார். இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கூறியதாவது: திருவரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது 2011-12ம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாகத் தொடங்கப்பட்டு, பின்னர் 2020-21ம் ஆண்டில் அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது இக்கல்லூரியில் 8 இளநிலை மற்றும் 4 முதுநிலை பாடப்பிரிவுகளில் சுமார் 1,400 மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். மாணாக்கர்களின் தேவையறிந்து, இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ‘பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ் 10 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இப்பணிகள் தற்போது முழுமையாக முடிக்கப்பட்டு, மாணாக்கர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. மேலும் அங்கு ஏற்கனவே 150 பேர் அமரும் வசதி கொண்ட கருத்தரங்கக் கூடம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எனவே, தற்போதைக்கு உள் கலையரங்கம் அமைப்பதற்கான அவசியம் எழவில்லை, வருங்காலங்களில் தேவை மற்றும் நிதிநிலையைப் பொறுத்து இது குறித்துப் பரிசீலிக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த முதலமைச்சர ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.491 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு கல்லூரிகளில் நூற்றுக்கணக்கான ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் கழிவறை தொகுப்புகள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக 2025 ஆம் ஆண்டிற்காக ரூ.190.69 கோடி ஒதுக்கப்பட்டு, 29 கல்லூரிகளில் 440 வகுப்பறைகள் கட்டும் பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணாக்கர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
