மேட்டூர் ஞானதண்டாயுதபாணி கோயிலில் ரூ.2.38 கோடியில் திருப்பணிகள் நடந்து வருகிறது: சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

 

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது எஸ்.சதாசிவம்( பாமக) பேசுகையில், மேட்டூர் ஞானதண்டாயுதபாணி திருக்கோயிலின் திருப்பணியை துவக்க அரசு முன்வருமா? என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில் “ மீனாட்சி சுந்தரேசர் திருக்கோயில் மற்றும் ஞானதண்டாயுதபாணி திருக்கோயில் திருப்பணிக்காக இந்த அவையிலே வைத்த கோரிக்கைக்கு ஏற்ப ரூ.2 கோடி 38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் 20 சதவீதப் பணிகள் தான் முடிவடைந்துள்ளன.

அதற்கு காரணம் ஒப்பந்ததாரருடைய ஒத்துழையாமையே என்று உறுப்பினருக்கு தெரியும். ஆகவே சட்டமன்ற உறுப்பினரும் அதில் சிறப்பு கவனத்தை செலுத்தினால் விரைந்து அந்த பணி நடந்து முடிவதற்கு உண்டான சூழல் ஏற்படும். 30 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்ற இத்திருக்கோயில்களின் திருப்பணிகளை விரைந்து முடி முடிப்பதற்கு உண்டான முயற்சிகளையும் இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்” என்றார். எஸ்.சதாசிவம் : 2023 நவம்பர் மாதம் என்னுடைய கோரிக்கையை ஏற்று 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணி தொடங்கினார்கள். அது 10 மாத காலமாக தாமதமாக ஏற்படுகிறது.

அமைச்சர் அது ஒப்பந்தக்காரரால் என்று சொன்னார். அதற்கு துணை ஆணையர் தான் முயற்சி செய்ய வேண்டும். மேட்டூரில் இதுவரை எனது கோரிக்கையை ஏற்று 15 கோடி ரூபாய் அறநிலையத்துறையிலிருந்து கொடுத்து இருக்கிறார்கள். அதில் ஞானதண்டாயுதபாணி கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டுவதற்கு கேட்டிருந்தேன். மண் பரிசோதனைக்கு சென்றிருப்பதாக சொன்னார். அது எந்த நிலையில் இருக்கின்றது. அடுத்ததாக கொளத்தூர் ஒன்றியம் ஜலகண்டேஸ்வரர் கோயில் பழுதடைந்து இருக்கின்றது அதன் கட்டுமான பணிகளை எப்போது தொடங்கி குடமுழுக்கு செய்வீர்கள்?

அமைச்சர் பி.கே.சேகர்பாபு:
ராஜகோபுரம் கட்டுமான பணியை பொறுத்தளவில் உபயதாரரின் நிதி ரூ. 1.20 கோடி செலவில் கட்டுவதற்கு மண் பரிசோதனை செய்யப்பட்டு பணிகள் தொடங்க தயாராக இருக்கின்றது. திருக்கோயிலின் கட்டுமான பணிகள் முடிந்த பிறகு தான் இராஜகோபுர பணிகள் தொடங்குகின்ற ஒரு சூழ்நிலை. திருக்கோயில் அமைந்திருக்கின்ற பகுதி சிறிய பகுதி என்பதால் உறுப்பினருடைய கோரிக்கையை ஏற்று திருக்கோயிலின் கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி இராஜகோபுரப் பணிகளும் தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.

Related Stories: