புதுச்சேரியில் 2 இருமல் மருந்து உற்பத்திக்கு தடை: ரிஸ்பவி பிரஸ்- டிஆர், மெடிகோப்-டி சிரப்பை விற்க கூடாது என உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 2 இருமல் மருந்து உற்பத்திக்கு தடை விதித்தும், ரிஸ்பவி பிரஸ்- டிஆர், மெடிகோப்-டி சிரப்பை விற்க கூடாது எனவும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் திருவாண்டார்கோவில் பகுதியில் உள்ள தோரப் பார்மா மற்றும் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் இருமல் மருந்து உற்பத்தியில், பல்வேறு குறைபாடுகளைக் கண்டறிந்து, சென்னை தென் மண்டலம் சிடிஎஸ்சிஒ துணை மருந்து கட்டுப்பாட்டாளர் (இந்தியா) சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.

அவர்கள் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லாததால், 1940ம் ஆண்டு மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் மற்றும் விதி 85(2) படி, இருமல் மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருபுவனை பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க்கில் உள்ள மெஸ்ஸர்ஸ் வெர்டெக்ஸ் பார்மா கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் இருமல் சிரப் உற்பத்தியை நிறுத்தமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை புதுச்சேரி மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி அனந்தகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

தொடர்ந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத் பாவ்லா சந்த்கோதர் நெடுஞ்சாலையில் உள்ள எத்கெம் பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான ரிஸ்பவி பிரஸ்- டிஆர் என்ற இருமல் மருந்து (சிரப்) புதுச்சேரியில் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் ரோர்கி பகுதியில் இருந்து இன்டியன் டிரக் விஷன் நிறுவனத்தின் மெடிகோப்-டி சிரப் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 2 இருமல் மருந்துகளையும் புதுவை மாநிலத்தில் உள்ள மருந்துகடை உரிமையாளர்கள் வாங்கவும், விற்கவும் கூடாது. மேலும், இந்த மருந்துகள் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு தெரியப்படுத்துவிட்டு, அதனை குறிப்பிட்ட மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கு அல்லது வினியோகஸ்தர்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும், என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: