நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அமளிக்கு தடை; எம்பிக்கள் இருக்கையில் அமர்ந்தால் மட்டுமே வருகை பதிவு: சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி

 

லக்னோ: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் அகில இந்திய சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. இதன் 86ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘ஜனநாயகம் செழிக்க நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் விவாதங்கள் நடைபெற வேண்டுமே தவிர அமளிகள் நடக்கக்கூடாது. திட்டமிட்டு சபையை முடக்குவது நாட்டு மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் செய்யும் துரோகம். மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் காலத்தை தாண்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் பொதுமக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்பதை உணர வேண்டும்’ என்றார்.

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரையும், பின்னர் மார்ச் 9ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரையும் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடரில் கடைபிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகள் குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தால் மட்டுமே இனிமேல் வருகை பதிவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். லாபியில் நின்றோ அல்லது வேறு இடத்திலோ கையெழுத்திடும் பழைய நடைமுறை இந்த கூட்டத்தொடர் முதல் ரத்து செய்யப்படும்’ என்று அவர் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Stories: