புதுடெல்லி: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் அமலாக்கத் துறை கூடுதல் விசாரணை நடத்த முடியுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்ய உள்ளது. சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் துணைச் செயலாளராகப் பணியாற்றிய சவுமியா சவுராசியா என்பவர் மீது சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இவர், முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும், கூடுதல் விசாரணை என்ற பெயரில் தன்னை நீண்ட காலமாக சிறையில் வைத்துள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அமலாக்கத் துறை வரம்பற்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகவும், ஜாமீன் கிடைப்பதைத் தடுக்கவே இதுபோன்று செயல்படுவதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இவ்வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், ‘குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் உள்ளது போல கூடுதல் விசாரணை நடத்தும் அதிகாரம், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறைக்கு வழங்கப்படவில்லை’ என்று வாதிட்டனர். மேலும் ‘துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து எதிரிகளை காலவரையற்ற காவலில் வைக்கும் உத்தியை அதிகாரிகள் கையாளுகின்றனர்’ என்றும் குற்றம் சாட்டினர். இந்த வாதத்தை ஏற்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, அமலாக்கத் துறைக்கு இத்தகைய அதிகாரம் உள்ளதா என்பது குறித்து பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் விசாரணை அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி சைதன்யா பாகல் உள்ளிட்டோர் தாக்கல் செய்த 40க்கும் மேற்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
