?யாரை நாம் கடவுளாக நினைக்க வேண்டும்?
– டி.என்.ரங்கநாதன்,திருவானைக்காவல்.
‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’, ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்றெல்லாம் படித்திருக்கிறோமே! பெற்றவர்களையும், கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியரையும் தெய்வமாக மதிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். மாதா, பிதா, குரு இவர்களை நாம்கடவுளாக எண்ணி வணங்கினாலே தெய்வத்தின் அருள் நம்மிடம் வந்து சேரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
?நாந்தி சிராத்தம் என்கிறார்களே? அப்படி என்றால் என்ன?
– என்.ஜே.ராமன், திருநெல்வேலி.
விருத்தி சம்ஸ்காரம் என்று சொல்வார்கள். இது ஒரு மங்களகரமான கர்மா. ஆனால், இதை தனியாக செய்ய இயலாது. சில குறிப்பிட்ட கர்மாக்களுக்கு அங்கமாகத்தான் இதைச் செய்யச் சொல்லி இருக்கிறார்கள். கர்பாதானம், சீமந்தம், ஜாதகர்மம் நாமகரணம், விவாகம்,கிரகப்பிரவேசம் முதலிய விசேஷங்களில் நான்கு சிராத்தம் செய்யச் சொல்லி இருக்கிறார்கள் மங்களப் பொருளை ஏந்தி கொண்டு சந்ததியினர்களை ஆசீர்வாதம் செய்ய நமது முன்னோர்கள் வருவதால் அவர்களுக்கு நாந்தி முகர்கள் என பெயரிட்டு இருக்கிறார்கள். கோலம் போடுதல் மங்கள அட்சதை எல்லாம் இருக்கும். குடும்ப விருத்திக்காக செய்யப்படும் இதை நன்கு சிரத்தையோடு செய்வது நம்முடைய குடும்பத்திற்கு நல்ல வளர்ச்சி யையும் புகழையும் சந்தோஷத்தையும் தரும்.
வீட்டில் அதிக அளவில் தண்ணீரைப் பயன்படுத்தினால் தரித்திரம் ஏற்படும் என்கிறார்களே, உண்மையா?
– வாசுதேவன், ரெய்ச்சூர்.
உண்மைதான். தண்ணீர் என்பது மகாலட்சுமியின் அம்சம். தண்ணீரை ஆப; என்றும் அப்பு என்றும் குறிப்பிடுவார்கள். தெலுங்கு மொழியில் அப்பு என்ற வார்த்தைக்கு கடன் என்று பொருள். ஆக தண்ணீரை அளவுக்கதிகமாக செலவழித்தால் பொருட்செலவு என்பதும் அதிகமாகி வீட்டில் தரித்திரம் என்பது தாண்டவமாடத் தொடங்கிவிடும். எக்காலத்திலும் தண்ணீரை வீணாக்கக் கூடாது. அப்படி தண்ணீரை வீணாக்குபவர்கள் இல்லத்தில் தரித்திரம் வந்து சேரும் என்ற கருத்து உண்மைதான்.
?எத்தனை நாளுக்கு ஒருமுறை மௌனவிரதம் இருக்கலாம்?
– ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி.
மௌன அங்காரக விரதம் அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தரும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதாவது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நாளில் மௌனவிரதம் இருந்தால் நல்லது என்பதே அதற்கான பொருள். கலக்கமான மனநிலையைக் கொண்டவர்கள் வாரம் ஒரு முறை அதாவது செவ்வாய்க்கிழமை நாளில் மௌன விரதத்தை மேற்கொள்ளும்போது கலக்கம் நீங்கி நன்மை அடைவார்கள்.
?உதகசாந்தி என்பது என்ன? எதற்காகச் செய்கிறார்கள்?
– கி.ராஜநாராயணன், திருப்பூர்.
உபநயனம், சீமந்தம் போன்ற முக்கிய சடங்குகளின் அங்க மாகவும், விசேஷ நாட்களிலும் செய்யப்படும் சாந்தி கர்மா இது.. போதாயண மஹர்ஷியால் அபம்ருத்யு அரிஷ்டம் (ஆயுள் தோஷம்) ஆகியவற்றை விலக்கி நீண்ட ஆயுளை ஏற்படுத்தித் தருவதற்காகக் கூறப்பட்டுள்ளது. ஒரு கலசத்தில் (குடத்தில்) வருணனை பூஜை செய்து, உதக சாந்திக்குரிய வேத மந்திரங்களை ஜபம் செய்யச் சொல்லி, அந்த கலச ஜலத்தைக் கொண்டு கர்த் தாவுக்கு அபிஷேகம் செய்வார்கள்.
?வழிபாட்டிற்கு எது முக்கியம்?
– கிருஷ்ணகுமார், திருப்பதி.
பொறுமைதான் முக்கியம்.இன்றைக்கு பல வழிபாட்டுத் தலங்களில் பொறுமை இல்லாததைப் பார்க்கிறோம். வழிபாட்டிற்கு முக்கியமானது பொறுமை என்பதை மறந்து விடக்கூடாது. இன்னும் ஆழமாகச் சொல்லப் போனால், பொறுமையாக இருப்பதே ஒரு வழிபாடுதான்.
?யாரை நாம் எப்போதுமே மறக்கக் கூடாது?
– வித்யா, சென்னை.
இதற்கு மகாபாரதத்தில் விதுரர் பதில் சொல்லுகிறார்;
*ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
* நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
* நம் நலத்தை நாடுபவர்கள்.
இந்த மூன்று பேரை எப்பொழுதும் மறக்கக்கூடாது என்கிறார்.
?நல்ல வீடு அமைய உதவி புரிவது கிரஹங்களின் அமைப்பா அல்லது வாஸ்து சாஸ்திரமா?
– ஜெ.மணிகண்டன், வேலூர்.
நிச்சயமாக ஜனன ஜாதகத்தில் உள்ள கிரஹங்களின் அமைப்புதான் நல்ல வீடு அமைவதற்கு துணை புரியும். ஜாதகத்தில் நான்காம் பாவகம் நல்ல படியாக இருந்து, லக்ன பாவகமும் வலுப்பெறும் பட்சத்தில், வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருக்கும் நல்ல வீடு என்பதை சொந்தமாக்கிக் கொள்ள இயலும்.
?சாமியார்கள் நீண்ட சிகையுடன் தாடியும் வளர்க்கிறார்களே, நீண்ட சிகைக்கும் ஆன்மிகத்திற்கும் தொடர்பு உண்டா?
– ஆர்.சாந்திதேவி, விழுப்புரம்.
மழித்தலும் நீட்டலும் வேண்டாஉலகம் பழித்தது ஒழித்துவிடின் என்று வள்ளுவப் பெருந்தகை தெளிவாகக் கூறியிருக்கிறாரே. இந்தக் குறளின் மூலமாக குறள் கூறும் கருத்து இதுதான். உலகத்தாரால் பழியான காரியங்கள், அதாவது தவறான காரியங்கள் என்று விலக்கப்பட்ட குற்றங்களைச் செய்யாதிருந்தாலே போதும். அதனை விடுத்து தலையை மொட்டை அடித்துக் கொள்வது அல்லது தலைமுடி, தாடி முதலியவற்றை நீண்டு வளரவிடுவது முதலான சின்னங்கள் உண்மையான துறவிக்கு அவசியமில்லை. தனது நன்னடத்தையின் மூலமாக மட்டுமே தன் நிலையைஉலகத்தாருக்கு உணர்த்த வேண்டுமே தவிர, வெறும் வெளிவேடத்தினால் அல்ல. பொய், புரட்டு, கபடு, சூது, வஞ்சனை, மது, மாது என உலகம் பழிக்கும் தீய பழக்கங்களை ஒழித்துவிட்டாலே போதும். தலையை மொட்டையாக மழித்தலும் தேவையில்லை, தாடியை நீட்டலும் தேவையில்லை. உண்மையான ஆன்மிகவாதிக்கு வெளிவேடம் அவசியமில்லை.
?சிலருக்கு இடது கை பழக்கம் இருக்கின்றது. இது நன்மையைத் தருமா? இதை மாற்றமுடியாதா?
– வண்ணை கணேசன், சென்னை.
பார்வதீ வாமபாகம் என்பார்கள். அதாவது, சக்தி தேவி ஆகிய அன்னை பரமேஸ்வரனின் இடது பாகத்தில் இடம் பிடித்திருப்பார். இடதுகை பழக்கம் இருப்பவர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருப்பார்கள். கிரிக்கெட் விளையாட்டில்கூட நிறைய இடது கை ஆட்டக்காரர்கள் இமாலய சாதனை புரிந்திருப்பதை காண இயலும். இடது கை பழக்கம் இருப்பது என்பது தீமையல்ல.
