ஆதனூர் துணை சுகாதார நிலையம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

பேராவூரணி, ஜன.28: ஆதனூர் துணை சுகாதார நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக, துணை சுகாதார நிலையத்தை சுற்றி, மரம், செடி, கொடிகள் மண்டி புதர் போல காட்சி அளிக்கிறது. கட்டிடம் பழுதடைந்து, மின்சார வயர்கள் அறுந்து தொங்கிக் கிடக்கிறது. கழிப்பறை தண்ணீர் வசதி இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. போதிய வசதி இல்லாததால் மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு வருவதில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பேராசிரியர் கரம்சந்த் காந்தி கூறியது, இந்த துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்ட போது, மருத்துவர்கள் தினசரி வந்து சென்றனர். ஒரு செவிலியர் இங்கேயே தங்கி இருந்து, முதலுதவி சிகிச்சை செய்து வந்தார். இரவு மற்றும் அவசர நேரத்தில் மிகுந்த உதவியாக இருந்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே கட்டிடம் பாழடைந்த நிலையில் பூட்டிக் கிடக்கிறது. மருத்துவர் வருவதே இல்லை. ஆதனூர், கூப்புளிக்காடு, கருப்பமனை உள்ளிட்ட இப்பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அவசர சிகிச்சைக்கு சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை வேண்டும் என்றார்.

Related Stories: