டெல்லி போராட்டத்தின்போது விவசாயிகள் மீது தாக்குதல் கண்டித்து ஆர்ப்பாட்டம் அனைத்து கட்சியினர் திரண்டனர்

தஞ்சை, ஜன.28: டெல்லியில் பேரணி சென்ற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை ரயிலடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து உத்ராபதி தலைமை வகித்தார். குடியரசு தினவிழா முடிந்தபின் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த டெல்லி காவல் துறை அனுமதி அளித்தது. டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது நடத்திய தாக்குதலில் ஒரு விவசாயி உயிரிழந்தார். 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதனை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சிபிஐ எம் எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் அருணாசலம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஜெயின் அலாவுதீன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்: கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பாரதி தலைமையில் மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரண்டனர். அங்கிருந்து தேசிய கொடியுடன் முக்கிய வீதிகள் வழியாக தலைமை அஞ்சலகம் வரை ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பாபநாசம்: பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூ பாபநாசம் ஒன்றியச் செயலர் செல்லத்துரை தலைமை வகித்தார். இதில் மாவட்டக் குழு சாமு.தர்மராஜன், குணசேகரன், மாவட்ட நிர்வாகக் குழு மதியழகன் உள்பட பலர் பங்கேற்றனர். திருக்காட்டுப்பள்ளி: டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் போலீசார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து செங்கிப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு இந்திய கம்யூனிஸ்ட் பூதலூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், துரைராஜ், கவுன்சிலர் லதா, நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒரத்தநாடு: ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே அனைத்து கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில் திமுக கார்த்திகேயன், சிபிஐ சீனி முருகையன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: