மீனம்பாக்கம்: மதுராந்தகத்தில் வரும் 23ம் தேதி நடைபெறும் பாஜ பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையம் மற்றும் மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று டெல்லியிலிருந்து வந்திருந்த எஸ்பிஜி எனும் சிறப்பு பாதுகாப்பு படை ஏஐஜி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள விளையாட்டு திடலில் வரும் 23ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்ற பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். மேலும், இக்கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஜி.கே.வாசன், ஜான்பாண்டியன் உள்பட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 23ம் தேதி மதியம் 1.15 மணியளவில் புறப்பட்டு, மதியம் 2.15 மணியளவில் பிரதமர் மோடி தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். பின்னர், அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் மதியம் 2.25 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். மாலை 3 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்றடைகிறார். பின்னர் மாலை 3 மணியிலிருந்து 4.30 மணிவரை மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து, மதுராந்தகத்தில் மாலை 4.30 மணியளவில் தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, சென்னை பழைய விமானநிலையத்திற்கு மாலை 5 மணியளவில் வந்தடைகிறார்.
பின்னர், மாலை 5.05 மணியளவில் தனி விமானத்தில் பிரதமர் மோடி புதுடெல்லிக்குப் புறப்பட்டு செல்கிறார். மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு பங்கேற்க சென்னைக்கு பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, டெல்லியிலிருந்து நேற்று சென்னை விமானநிலையத்தில் எஸ்பிஜி எனும் சிறப்பு பாதுகாப்பு படை ஏஐஜி அமிசந்த் யாதவ் தலைமையிலான குழுவினர் வந்திறங்கினர். பின்னர், சென்னை பழைய விமான நிலையத்தில் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பிஜி சார்பில் ஏஎஸ்எல் எனும் அட்வான்ஸ் செக்யூரிட்டி லையேசன் கூட்டத்தை நடத்தினர். இதில் சென்னை மாநகர உயர் காவல்துறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், சென்னை விமானநிலைய அதிகாரிகள், மத்திய-மாநில உளவு பிரிவினர், மிக முக்கிய பிரமுகரின் பாதுகாப்பு அதிகாரிகள், மருத்துவம் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, சென்னை பழைய விமான நிலையத்தில் பிரதமரின் தனி விமானம் வந்து நிற்கும் பகுதி, மதுராந்தகம் செல்ல பிரதமருக்கு பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் நிற்கும் பகுதி, அப்பகுதியில் எந்தெந்த அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து எஸ்பிஜியின் ஏஐஜி தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இதையடுத்து, சென்னை பழைய விமானநிலைய பகுதிகள் அனைத்தும் நேற்று முதல் வரும் 23ம் தேதிவரை மொத்தம் 4 நாட்களுக்கு முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு உள்ளது. பின்னர் எஸ்பிஜி குழுவினர் மதுராந்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு காரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், தனி ஹெலிகாப்டர் வந்திறங்கும் இடம் உள்பட பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மதுராந்தகம் கூட்டத்துக்காக சுமார் 3 மணி நேரம் மட்டுமே சென்னைக்கு பிரதமர் மோடி வந்து செல்லவிருப்பதால், சென்னை விமானநிலையத்தில் விஐபிக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தகவல் கூறப்படுகிறது.
