நந்தனம் பழங்குடியினர் பள்ளி நில விவகாரம்: தமிழ்நாடு அரசின் அதிரடி நடவடிக்கையால் அரசுக்கே சொந்தமானது!

சென்னை மாவட்டம், மயிலாப்பூர் வட்டம், நந்தனம், பிளாக் எண்.77 புல எண்.3884/4-ல் உள்ள 6.2232 கிரவுண்டு பரப்பளவு கொண்ட புலத்தின் ஒரு பகுதியில், ஆதி திராவிடர் நல விடுதி ஒன்று 1958 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே செயல்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து, கொடுங்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. தனிநபர் ஒருவர். மேற்காணும் இடத்திற்கு உரிமை கொண்டாடியும், அரசு பழங்குடியினர் பள்ளியை உடனடியாக காலி செய்து, நிலத்தினை ஒப்படைக்குமாறு கோரி மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குகள் தொடுத்து வந்தார்.

தமிழக அரசு, மேற்காணும் வழக்குகளில், உரிய ஆதார ஆவணங்களுடன் எதிர்வாதுரைகள் தாக்கல் செய்தும், நிலமானது பழங்குடியினர் நலத்துறைக்கு சொந்தமானது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைத்து வந்தது. தமிழக அரசின் தொடர் முயற்சிகளின் விளைவாக, தனிநபர் தொடுத்த வழக்கினை, மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் தமது 04.11.2025 நாளிட்ட தீர்ப்பில் தள்ளுபடி செய்து ஆணையிட்டது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினைத் தொடர்ந்து, தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு, பிளாக் எண் 77. புல எண் 3884/ 4 இல் (10 ஏர்ஸ், 14.5 ச.மீ) உள்ள நிலத்திற்கு “பழங்குடியினர் நலத்துறை” பெயரில் பட்டா பெற்றதுடன், வருவாய் ஆவணங்களில் உரிய பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்காணும் நிலமானது பழங்குடியினர் நலத்துறைக்கு சொந்தமானது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தொடர் முயற்சிகளின் காரணமாக, 67 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த நிலப் பிரச்சினைக்கு, நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

Related Stories: