ஊட்டி, ஜன. 21: நீலகிரி மாவட்டத்தில் உயிர்சோலை திட்டத்தின் கீழ், வகுப்பறை பாடத்திட்டம் மற்றும் சூழல் சார்ந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள் ஆசிரியர்களுக்கு, சான்றிதழ்கள் மற்றும் ‘நீலகிரி இகோ கார்டியன்’ பேட்ஜ் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கல்லக்கொரை அரசு உயர்நிலைப்பள்ளியில் உயிர்சோலை திட்டத்தின் கீழ், வகுப்பறை பாடத்திட்டம் மற்றும் சூழல் சார்ந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு சான்றிதழ்கள் மற்றும் ‘நீலகிரி இகோ கார்டியன்’ பேட்ஜ் வழங்கினார்.
உயிர்சோலை திட்டத்தின் கீழ் இடம் சார்ந்த கல்வி அளிக்க மாவட்டம் முழுவதும் 51 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வகுப்பறை பாடத்திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சூழல் சார்ந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதன் ஒரு பகுதியாக கல்லக்கொரை அரசு உயர்நிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 14 மாணவ, மாணவியர்களுக்கு ‘நீலகிரி இகோ கார்டியன்’ பேட்ஜ் மற்றும் 6 ஆசிரியர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருநாவுகரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
