தீர்ப்பு வந்தும் பிரச்னை தீராததால் பெண் தீக்குளித்து சாவு: தம்பதி கைது

ஆவடி: ஆவடி அடுத்த மேல்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (45). இவர் ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (40). கடந்த 15 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.  

இந்த நிலையில், இவர்களின் வீட்டுக்கு அருகே வசித்துவரும் ஆட்டோ டிரைவர் வினோத் (34) இவரது மனைவி பவானி (32) இருவருக்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இதுசம்பந்தமான கடந்த 8 ஆண்டுகளாக அம்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இதில் சரஸ்வதிக்கு சாதகமாக கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு  தீர்ப்பு வந்துள்ளது.

எனவே, சரஸ்வதி அந்த இடத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முள்வேலி அமைத்துள்ளார். ஆனால் பவானியும் அவரது கணவர் வினோத்தும் தொந்தரவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாதபோது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் தீக்காயமடைந்த அவரை உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையில் முத்தாபுதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்தார். இதில் சரஸ்வதி இறப்பதற்கு முன்பு கொடுத்த வாக்கு மூலத்தில், ‘‘என்னுடைய தற்கொலைக்கு பவானியும் விநோத்தும் தான் காரணம் என கூறியிருந்தார். இதையடுத்து போலீசார், பவானி, விநோத்குமார் இருவரையும் கைது செய்தனர்.

Related Stories: