ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் சேதமடைந்த தரைப்பாலம் சீரமைப்பு: போக்குவரத்து தொடங்கியது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் மழை வெள்ளத்தில் சேதமடைந்த தரைப்பாலம் சீரமைப்பு பஸ் போக்குவரத்து தொடங்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும், புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர். நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலம் பகுதிகளில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை பெய்ததால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது. இதையொட்டி, கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால், ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே உள்ள ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே ரூ.27 கோடியில் புதிய பாலம் கட்டப்படுவதால், போக்குவரத்திற்காக தற்காலிகமாக மாற்று தரைப்பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாலம் சேதமடைந்து இரண்டு இடங்களில் துண்டாக உடைந்தது. இந்த பாலம் துண்டானதால் 61 நாட்களாக போக்குவரத்து முடங்கியது வணிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு போராட்டங்கள் நடத்திய பிறகு நேற்று திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை போக்குவரத்து தொடங்கியது. இதனால், ஊத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டார 50 கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும், புதிதாக கட்டப்படும் பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: