×

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

சேலம், ஜன.28:10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் வருவாய் துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழகம் முழுவதும் அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை உள்ள, வருவாய் துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுஉட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாநிலம் முழுவதும் தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 140 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்டோர் நேற்று விடுப்பு எடுத்து பணியை புறக்கணித்தனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் துறை சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகமும் பணியாளர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களும் பணியாளர்களின்றி காணப்பட்டன. இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அர்த்தநாரி கூறுகையில், “வருவாய்த்துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு அடிப்படை மற்றும் நிலஅளவை பயிற்சி, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த கட்டமாக, வரும் 6ம் தேதி சேலத்தில் கோரிக்கை பேரணி மற்றும் மாநாடும், அதனை தொடர்ந்து 17ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும் ஈடுபடுகிறோம்,” என்றார். இந்த போராட்டத்தால், பொதுமக்களுக்கான சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, பட்டா மாறுதல் உட்பட வருவாய் துறை சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தடைப்பட்டது. அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags : Revenue officials ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 16 இடங்களில் வருமான அதிகாரிகள் சோதனை