ஈழ தமிழரின் அரசியல் உரிமைக்காக பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு வரவேற்பு

 

சென்னை: ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் அறிக்கை: கடந்த ஜனவரி 11ம் நாள் ஈழத் தமிழரின் அரசியல் உரிமைகளைப் பாதுகாத்திட தூதரக உறவுகளைப் பயன்படுத்தி உடனடியாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்நாடு முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதை ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வரவேற்கிறது. அதுபோலவே, ’தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் முன்னெடுத்து வரும் அயலகத் தமிழர் மாநாடு பாராட்டுக்குரியது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பண்பாடு, கலை, இலக்கியம், வணிகம், தொழில் வளர்ச்சி ஆகியவை குறித்து பேசுவது தமிழர்கள் கூட்டுப் பலத்துடன் உயர்வதற்கு உதவும் என்ற வகையில் இம்முயற்சி தொடர வேண்டும்.

தமிழீழ தாயகத்தில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ்நாடு முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் உடனடியாக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது ஈழத் தமிழர்களின் பக்கம் தமிழ்நாடு நிற்கிறது என்ற நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஈழத் தமிழரின் அரசியல் தீர்வுக்காகவும் இனவழிப்புக்கு நீதி பெறவும் தொடர்ச்சியாக இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

 

Related Stories: