தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்வதா: எடப்பாடிக்கு ராமதாஸ் சூடு

 

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. பின்னர் ராமதாஸ் கூறியதாவது: டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்த கருத்தின்படியும், நீதிமன்ற தீர்ப்பின்படியும் அன்புமணி பாமக தலைவர் என்று சொல்ல முடியாது, சொல்லக்கூடாது. பாமகவிலிருந்து அடிப்படை உறுப்பினராக இருக்கக்கூடாது என்று செயற்குழு, பொதுக்குழு நிர்வாக குழு சொல்லிய பிறகும் அன்புமணி பாமகவின் தலைவர் என்று சொல்லித் திரிகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். டெல்லி நீதிமன்றம் தீர்ப்பின்படி பாமகவின் சின்னம், கொடி, பெயர் இதனை அன்புமணி உபயோகப்படுத்தக்கூடாது. அப்படி உபயோகப்படுத்தினால் அது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.

தேர்தல் கூட்டணி குறித்து சீக்கிரமே ஒரு நல்ல முடிவை உங்களுக்கு அறிவிப்போம். பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றி கூட்டணியாக அமையும். அப்படிப்பட்ட கூட்டணியை அமைக்க தீவிரமாக முயன்று வருகிறோம் என்றார்.எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதி குறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘தேர்தலில் எப்படியாவது ஓட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம். இதனை மக்கள் தான் தீர்மானிப்பவர்கள். மக்கள் தான் எஜமானர்கள். மக்கள் என்ன நினைக்கிறார்களோ அவர்கள், சரியாக வாக்களிப்பார்கள்’’ என்றார்.

Related Stories: