பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

திருப்பூர், ஜன.28:திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று நாடு முழுவதும் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக, திருப்பூரில் நடைபெற்றது. அதில் வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை உள்ள அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் தனி ஊதியம் வழங்க வேண்டும்.

கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவறை எழுத்தர் மற்றும் ஈர்ப்பு ஓட்டுனர் பணியிடங்களை உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதம் செய்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால், திருப்பூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: