கட்டிட தொழிலாளி கொலை வழக்கு வாலிபருக்கு ஆயுள் தண்டனை

ஊட்டி,ஜன.28:   ஊட்டியில் கட்டிட தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஊட்டி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஊட்டி கூட்செட் பகுதியில் தனியார் கட்டுமான பணிகள் நடந்தது. தேனியை சேர்ந்த தங்கவேல் என்பவரும், சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த தர்மதுரை (24) ஆகியோரும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி காலை வெகுநேரம் ஆகியும் தங்கவேல் மற்றும் தர்மதுரை ஆகியோர் பணிக்கு வரவில்லை. அவர்கள் தங்கியிருந்த ஷெட்டிற்கு சென்று ஊழியர்கள் பார்த்துள்ளனர். அப்போது, கட்டிடத்தின் ஒரு பகுதியில் தங்கவேல் ரத்த காயங்களுடன் கிடந்தார். உடனே, அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, கட்டுமான பணிகளை பார்த்து வந்த ரபீக் உடனடியாக ஊட்டி ஜி1 காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த போலீசார்  கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த மற்ற ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது இவருடன் தங்கியிருந்த தர்மதுரை தோசைக்கல்லினால் தாக்கி தங்கவேலை கொலை செய்துவிட்டு மாயமானது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தர்மதுரையை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாவா நேற்று தீர்ப்பு வழங்கினார். தர்மதுரைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Related Stories: