புதுகை, திருச்சியில் ஜல்லிக்கட்டு; 1,450 காளைகள் பாய்ச்சல் 550 வீரர்கள் மல்லுக்கட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சிப்காட் அருகே உள்ள வடமலாப்பூர் கருப்பு சாமி கோயில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதற்காக புதுகை, திருச்சி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியில் களத்தில் இறங்க 750 காளைகள், 250 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

காலை 8.15 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. களத்தில் சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். பல காளைகள் நின்று விளையாடி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், கட்டில், மெத்தை, மின்விசிறி, சேர், குக்கர் மற்றும் எவர்சில்வர் பாத்திரம், ரொக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா ஆலய திடலில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. 700 காளைகள் களம் இறங்கின. 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்ப்பட்டது. காலை 9.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். இங்கு கட்டில், வெள்ளிக்காசு, சேர், மின்விசிறி, எவர்சில்வர் பாத்திரம், ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது.

Related Stories: