அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50வது நாளாக தொடர் போராட்டம்

சிதம்பரம், ஜன. 28: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் கல்வி கட்டணத்தை கண்டித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்ட ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் அரசு கல்லூரிகளுக்கான கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 50வது நாளாக தொடர்ந்தது. போராட்ட பந்தலில் ஏராளமான மாணவர்கள் ஒன்று திரண்டு அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த இடத்திலேயே படிப்பது, எழுதுவது போன்ற பணிகளையும் செய்தனர். போராட்டம் பற்றி மாணவர்கள் கூறுகையில், அரசு கல்லூரியான இங்கு அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும். தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பதற்கு மாணவர் பிரதிகள் தயாராக இருக்கிறோம், என்றனர்.

Related Stories: