- பிரதமர் மோடி
- திருச்செங்கோடு
- காசி தமிழ் சங்கம்
- புது தில்லி
- தமிழ்
- வாரணாசி, யுபி
- பிரகாஷ் பழனிவேல்
- திருச்செங்கோடு, தமிழ்நாடு
- மோடி
புதுடெல்லி: உபியின் வாரணாசியில் காசி தமிழ் சங்கம் 4வது பதிப்பு கடந்த டிசம்பரில் நடந்தது. இதில், தமிழ்நாட்டின் திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவர் பிரகாஷ் பழனிவேல் பங்கேற்றார். அதில் தான் பெற்ற அனுபவங்களை தொகுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் மாணவர் பிரகாஷ், காசியை பாரத மாதாவின் புனிதமான கழுத்து ஆபரணமாகவும், தமிழ்நாட்டை வெள்ளிக் கொலுசாகவும் சித்தரித்திருந்தார். இரண்டும் வெவ்வேறானவை என்றாலும் ஒரே ஆன்மீக உடலின் பிரிக்க முடியாத பகுதிகள் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி பாராட்டி பதிலளித்துள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: மாணவர் பிரகாஷின் பயணம், காசியில் அவரது சிறந்த அனுபவங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. பிரகாஷ் இயற்றிய கவிதை ஆழமாக நெஞ்சைத் தொடுகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்வானது, தமிழ் மொழி, தமிழ்நாட்டின் செழுமையான கலாச்சாரம், காசியுடனான அதன் வரலாற்றுத் தொடர்பு ஆகியவற்றைக் கொண்டாடும் துடிப்பான தளமாக மாறியுள்ளது. இத்தகைய பங்கேற்பின் மூலம், பிரகாஷ் பழனிவேல் போன்ற மாணவர்கள் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை உயர்த்திப் பிடிப்பவர்களாக மாறியுள்ளனர்.
இத்தகைய இளம் பங்கேற்பாளர்கள் மற்றவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவார்கள் என நம்புகிறேன். காசி தமிழ் சங்கமம் மீதான மாணவர் பிரகாஷின் பற்றுக்கும் ஆதரவுக்குகும் நன்றி. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான கருத்துகள், நாடு முழுவதும் கலாச்சாரப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த என்னை ஊக்குவிக்கின்றன. மாணவர் பிரகாஷின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கங்கை நதிக்கரையில் இருந்து நாட்டின் தென் பகுதிக் கடற்கரைகள் வரை, இந்தியாவின் உயிரோட்டமான நாகரிக ஒற்றுமைக்கு இந்த கடிதப் பரிமாற்றம் ஒரு சக்திவாய்ந்த சான்றாகத் திகழ்கிறது. இதில் இளைஞர்கள் கலாச்சாரத்துடனும், ஆன்மீகத்துடனும் இணைந்து தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றனர் என்றார்.
