கோவை: தொழிலதிபர்களை மிரட்டி 4.8 கிலோ தங்கம், ரூ.15 கோடி நிலம் மோசடி செய்த இன்ஸ்பெக்டர் மீதான வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதில் உயர் அதிகாரிகள் பலர் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கோவை கவுண்டம்பாளையத்தை அடுத்த இடையர்பாளையத்தை சேர்ந்தவர் பாலவெங்கடேஷ் (50). இவர் சாய்பாபா காலனி என்எஸ்ஆர் ரோடு, பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக கோவை, சொக்கம்புதூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
அப்போது அவர் நடத்தி வந்த தங்க சீட்டில் பாலவெங்கடேஷ் இணைந்துள்ளார். அதில் பாலவெங்கடேசுக்கு 9 கிலோ 500 கிராம் மற்றும் டெபாசிட் தங்கம் 1 கிலோ 677 கிராம் முத்துக்குமார் தரவேண்டியிருந்தது. ஆனால் அதனை தராமல் முத்துக்குமார் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து பாலவெங்கடேஷ் தனக்கு சேரவேண்டிய தங்கத்தை மீட்டு தரவேண்டி கடந்த 2024 ஏப்ரல் 25ம் தேதி செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து கடந்த 2024 மே 24ம் தேதி பாலவெங்கடேஷ் வீட்டிற்கு அப்போதைய செல்வபுரம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் 2 பெண் போலீசார் சென்று ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 500 மற்றும் 71.900 கிராம் நகைகள் ஆகியவற்றை எடுத்து சென்றனர்.
பின்னர் வீட்டிலிருந்து சாய்பாபா காலனியில் உள்ள பாலவெங்கடேஷ் கடைக்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் சென்ற போலீசார் அங்கிருந்த 3 கிலோ 600 கிராம் தங்க நகைகளை எடுத்துக்கொண்டனர். பாலவெங்கடேசை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற இன்ஸ்பெக்டர் செல்வராஜ், உன்னை கைது செய்யாமல் இருக்க முத்துக்குமார் என்பவருக்கு ஈரோடு மாவட்டம், தாளவாடி, மல்லன்குழி பகுதியில் உள்ள உனது 50 ஏக்கர் விவசாய பூமியை கிரையம் செய்து கொடுக்க செட்டில்மெண்ட் பேசியுள்ளார். வேறு வழியின்றி பாலவெங்கடேஷ் ஒப்புக்கொண்டார்.
பின்னர் முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர் அம்பி ஆகியோர் ரூ.15 கோடிக்கு மேல் உள்ள பாலவெங்கடேசின் சொத்தை பெற்றுக்கொண்டனர். பின்னர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் இதை யாரிடமும் தெரிவிக்ககூடாது என மிரட்டி அவரை வெளியேற்றினார். அதேபோல கோவை தொழிலதிபரான சோமசுந்தரம் (58) என்பவரை மிரட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் முத்துக்குமார் 1 கிலோ 200 கிராம் தங்கத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டனர். இதுகுறித்து சோமசுந்தரம் மற்றும் பாலவெங்கடேஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதன் அடிப்படையில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் தற்போது திருப்பூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் செல்வராஜ் மற்றும் நகை வியாபாரி முத்துக்குமார் ஆகியோர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் மேலும், சில போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்போதைய கோவை மாநகர கமிஷனர் சரவண சுந்தர் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என டிஜிபி வெங்கடராமனுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் முத்துக்குமார் மீதான மோசடி வழக்கை கோவை சரக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது. இதில் சில உயர் போலீஸ் அதிகாரிகள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.
