- தவெகா
- பகுஜன் சமாஜ் கட்சி
- திருவள்ளூர்
- பார்த்திபன்
- கூகம் நதி
- வார்டு 27
- திருவள்ளூர் நகராட்சி
- பல்லவன் வங்கி
- செவ்வாப்பேட்டை
- யுவஸ்ரீ
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி, 27வது வார்டு கூவம் ஆற்றங்கரை ஓரம் வசித்து வந்தவர் பார்த்திபன் (32). செவ்வாப்பேட்டையில் உள்ள பல்லவன் வங்கியில் கிளர்க்காக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி யுவஸ்ரீ (29) என்ற மனைவியும், 2 வயதில் குழந்தையும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (31). இவரது மனைவி ஷர்மிளா (28). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. ஷர்மிளா 8 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இதனை முன்னிட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வளைகாப்பு நடத்தினர்.
மேலும், அதே பகுதியை சேர்ந்தவர் கேசவமூர்த்தி (25). சுகுமாரும், கேசவ மூர்த்தியும் தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் மோட்டார் சைக்கிள்கள் வாங்குவதற்காக வழங்கப்படும் லோனை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மூவரும் நண்பர்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலம், புத்தூர் அருகே உள்ள கோனே நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களான 3 பேரும் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மணவாளநகருக்கு வந்துள்ளனர். பிறகு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ராகவேந்திரா பேக்கரி அருகே நின்று் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது கூவம் ஆற்றங்கரை ஓரம் வசித்து வரும் ஜோதிஷ், வினோத் ஆகிய 2 பேரும் பேக்கரி அருகே மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் வேகமாக வந்துள்ளனர். இதை பார்த்த பார்த்திபன், சுகுமார், கேசவமூர்த்தி ஆகியோர் ஏன் இடிப்பது போல் வேகமாக வருகிறீர்கள் என கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜோதிஷ், வினோத் ஆகிய 2 பேரையும் தாக்கியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த சென்ற ஜோதிஷ் மற்றும் வினோத்குமார் ஆகிய 2 பேரும் தங்களது நண்பரான பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி நீலகண்டனிடம் தங்களை தாக்கியது குறித்து தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த நீலகண்டன், ஜோதிஷ், வினோத், மணவாள நகர், கே.கே.நகர், 4வது தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்கிற யுவராஜ் மகனும் தமிழக வெற்றி கழக பிரமுகருமான ஜவகர் ஆகிய 4 பேரும் ஒன்றாகச் சேர்ந்துக் கொண்டு பார்த்திபன், சுகுமார், கேசவமூர்த்தி ஆகிய 3 பேரையும் தாக்குவதற்காக திட்டம் தீட்டி கஞ்சா அடித்துவிட்டு தேடி வந்தனர். இந்நிலையில், இரவு 10.30 மணியளவில் மணவாளநகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள லாமியா ஓட்டலில் 3 பேரும் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். பின் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த 3 பேரிடமும் தகராறில் ஈடுபட்டனர்.
தகராறு அதிகமாகவே அருகில் கிடந்த கற்களை எடுத்து சராமரியாக வீசி தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சுகுமார் மற்றும் கேசவன் ஆகிய 2 பெரும் துடிதுடித்துக் கொண்டிருந்தனர். உடனடியாக அவர்கள் 2 பேரையும் அப்பகுதி மக்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் சுகுமார் பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் எஸ்பி விவேகானந்த சுக்லா, திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி தமிழரசி, மணவாள நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு பிணமாக கிடந்த பார்த்திபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மணவாளநகரில் மறைமுகமான இடத்தில் பதுங்கிக் கொண்டிருந்த நீலகண்டன் (31), வினோத்குமார் (36), ஜோதிஷ் (34), ஜவகர் (24) ஆகிய 4 பேரையும் கைது செய்ய முயற்சித்தனர்.
அப்போது அவர்கள் 4 பேரும் தப்பி ஓட முயன்று எகிறி குதித்த போது நீலகண்டனுக்கு வலது காலில் எலும்பு முறிவும், ஜவகருக்கு வலது கையிலும் எலும்பு முறிவும் ஏற்பட்டது. மேலும் வினோத் குமார் மற்றும் ஜோதிஷ் ஆகிய 2 பேரும் காயங்களுடன் தப்பினர். போலீசார் நீலகண்டன் மற்றும் ஜவகரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து மாவு கட்டு போட்டனர். இதை தொடர்ந்து போலீசார் 4 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
* உறவினர்கள் மறியல்
குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் திருவள்ளூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மணவாளநகர், ஒண்டிக்குப்பம் பகுதியில் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
* நடுரோட்டில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்யும் பயங்கர வீடியோ வைரல்
மணவாளநகர், ஒண்டிக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் நடந்த இரட்டை கொலை தொடர்பான பயங்கர வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொல்லப்பட்ட பார்த்திபன் மற்றும் சுகுமார் ஆகிய இருவர் மீதும் கொலையாளிகள் பெரிய, பெரிய கற்களை தூக்கி தலையில் போடுகிறார்கள். அப்போது அந்த வழியாக வாகனங்களும் சென்று கொண்டிருக்கின்றன. பொதுமக்களும் ரோட்டில் நடந்து செல்கிறார்கள். ஆனால் அதை பற்றியெல்லாம் கொலையாளிகள் துளியும் அச்சப்படாமல் கொலை சம்பவத்தை அரங்கேற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
இதனை அந்த வழியாக எதிர்திசையில் காரில் சென்ற சிலர் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். அவர்கள் பதற்றதோடு காரில் இருந்தபடியே ஒருவரை சாகடித்து விட்டார்கள் என்று பேசுவதும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இப்படி பதற்றத்தை ஏற்படுத்தும் வீடியோ நேற்று காலை சமூக வலைதளங்களில் அதிகளவில் பலராலும் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை வெளியிட்ட பலரும் தங்களது கண்டனங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இதுபோன்ற கொலை சம்பவங்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களே காரணமாக இருப்பதாகவும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்கள் மூலமாக பலரும் வெளியிட்டுள்ளனர்.
