இந்தூர்: இந்தூரில் அசுத்தமான குடிநீரால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசே பொறுப்பு என குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, இதுதான் ஸ்மார்ட் சிட்டிகளின் லட்சணமா? என கேள்வி எழுப்பி உள்ளார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூர், நாட்டின் மிகவும் தூய்மையான நகரம் என ஒன்றிய அரசால் விருது பெற்ற நிலையில், அங்குள்ள பகீரத்புரா பகுதியில் கடந்த மாதம் அசுத்தமான குடிநீர் குடித்த 24 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பகீரத்புராவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேற்று சந்தித்து பேசினார். அசுத்தமான குடிநீரால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
பின்னர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுத்தமான குடிநீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவது அரசின் பொறுப்பு. ஆனால் பாஜ அரசு இந்த பொறுப்புகளை நிறைவேற்றவில்லை. இந்தூரில் அசுத்தமான குடிநீர் குடித்து மக்கள் இறந்துள்ளனர். மக்கள் வேதனையில் இறந்து கொண்டிருக்கும்போதும், குடும்பங்கள் சிதைந்து கொண்டிருக்கும்போதும், பாஜ தலைவர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். இந்த அரசின் அணுகுமுறை மிகவும் மனிதாபிமானமற்றது. இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.
நாங்கள் பகீரத்புரா மக்களுடன் துணை நிற்கிறோம். குற்றவாளிகளைத் தண்டித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்யும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்தூர் ஒரு நகர்ப்புற மாடல் ஸ்மார்ட் சிட்டி. ஆனால் இங்கு சுத்தமான குடிநீர் கூட இல்லை. இது இந்தூரைப் பற்றிய பிரச்னை மட்டுமல்ல. நாடு முழுவதும் உள்ள நகரங்களில் இதுதான் நடக்கிறது. அரசின் அலட்சியத்தால் இந்தூரில் அசுத்தமான குடிநீர் குடித்து மக்கள் இறந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு முழு ஆதரவையும் போதுமான இழப்பீட்டையும் வழங்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
* அரசியல் உள்நோக்கம் கொண்ட பயணமா?
இந்தூருக்கான பயணம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என பாஜ விமர்சித்தது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், ‘‘நான் எதிர்க்கட்சித் தலைவர். இங்கு அசுத்தமான குடிநீரால் மக்கள் இறந்துள்ளனர். இங்குள்ள மக்களின் பிரச்னையை எழுப்பவும் அவர்களுக்கு உதவவும் நான் வந்துள்ளேன். இதில் எந்தத் தவறும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது எனது பொறுப்பு… இதை அரசியல் என்றோ அல்லது வேறு எதுவாகவோ சொல்லுங்கள். அது எனக்கு ஒரு பொருட்டல்ல’’ என்றார்.
