பாட்னா: மருத்துவ அறிக்கையில் வெளியான தகவலால் நீட் மாணவி மரண வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர், பாட்னாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி நீட் தேர்வுக்குப் படித்து வந்தார். கடந்த 9ம் தேதி விடுதி அறையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர், 11ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகப் போலீசார் முதலில் கூறினர். ஆனால், மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாகப் பெற்றோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது. அதில், ‘மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது’ என்று அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஏற்கனவே வந்த மருத்துவ அறிக்கைக்கு முரணாக இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கார்கில் சவுக் பகுதியில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, விடுதி உரிமையாளர் மனிஷ் குமார் ரஞ்சன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். மேலும், டிஜிபி உத்தரவின் பேரில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் இறுதி அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும், தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாகப் பெற்றோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்
