மணமகன் வீட்டில் 5 சவரன், ₹25 ஆயிரம் திருட்டு ஆரணி அருகே துணிகரம் திருமண வரவேற்புக்கு சென்றபோது

ஆரணி, ஜன.28: ஆரணி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரும் சென்ற நிலையில், மணமகன் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகைகள், ₹25 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(50), விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் விக்னேஷ், மகள் தாட்சாயணி. இந்நிலையில், விக்னேசுக்கு ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று காைல திருமணம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிக்கொண்டு திருமண மண்டபத்திற்கு வந்துவிட்டனர். பின்னர், வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த நிலையில், நள்ளிரவு 12 மணியளவில் கிருஷ்ணன் வீட்டிற்கு சென்றார். அப்போது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தது.மேலும், பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகைகள், ₹25 ஆயிரம் மற்றும் ஒரு லாக்கர் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணன் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories: