சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் செய்யும் பொதுமக்கள் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா? கடந்த ஆண்டு நடந்த விபத்துகளில் 236பேர் பலி

திருவண்ணாமலை, ஜன.28: விபத்து குறித்த விழிப்புணர்வு இல்லாமல், சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் பயணம் செய்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்ப்பார்க்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், சாலை விபத்துகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 236 பேர் இறந்தனர். 760 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துகளுக்கு பெரும்பான்மையான காரணம், அதிக வேகம், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லுதல், மது குடித்துவிட்டும், செல்ேபான் பேசியபடியும் வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனங்களில் 3 பேர் பயணம் போன்றவையாகும். விபத்துகளின் எண்ணிக்கை பெருகிய போதும், சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்னும் பொதுமக்களிடம் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு மட்டும், சாலை விதிமீறல் தொடர்பாக 5.40 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அதில், 2.64 லட்சம் வழக்குகள் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, 59 ஆயிரம் வழக்குகள் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியது ெதாடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 772 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்தும் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும், வாகன விபத்துகளும், சாலை விதிமீறல்களும் குறையவில்லை. திருவண்ணாமலை பகுதியில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லும் நடைமுறை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கார், வேன் போன்றவற்றின் வாடகை அதிகம் என்பதால், சரக்கு வாகனங்களை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். அதிலும், சம்பந்தப்பட்ட சரக்கு வாகனத்தின் தாங்கும் சக்திக்கும் அதிகமான எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றிச்செல்வது விபத்துக்கு முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக, கிராமப்புற மக்கள் தங்களுடைய சுக, துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்ல, மினி வேன் போன்ற சரக்கு வாகனங்களையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். வாடகை கட்டணம் குறைவு, 20 நபர்கள்வரை பயணிக்கலாம், சொந்த கிராமத்திலேயே இதுபோன்ற வாகனங்கள் எளிதில் கிடைக்கிறது போன்ற பல்வேறு காரணங்களால், சரக்கு வாகன பயணத்தை கிராமப்புற மக்கள் விரும்புகின்றனர். சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்வது விதிமீறல் என்றாலும், அதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுப்பதில்லை. நகர எல்லையில் கண்காணிப்பு இருப்பதால், பைபாஸ் சாலை, கிரிவலப்பாைத வழியாக இதுபோன்ற வாகனங்கள் பயணிக்கின்றன. எனவே, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்வதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: