வேலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் பீதி

வேலூர், ஜன.28: வேலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியரின் வீட்டின் கதவை உடைத்து ₹1.75 லட்சம் நகை, பணம் திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் அடுத்த பெருமுகை பேங்க் நகரை சேர்ந்தவர் ராஜீவ்(32). கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் கண்காணிப்பாளராக உள்ளார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பூண்டி கிராமத்தில் நடைபெற்ற நெருங்கிய உறவினரின் திருமணத்துக்காக கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் வழியாக சென்றவர்கள் முன்பக்க கதவின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு ராஜீவுக்கு போன் மூலம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த ராஜீவ், பார்த்தபோது தனது வீட்டின் பூட்டு உடைத்து அங்கிருந்த உள்பக்க அலமாரி உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 5 1/2 சவரன் தங்க நகைகள், ₹20 ஆயிரம் ரொக்கப்பணம், ₹10 ஆயிரம் மதிப்புள்ள கையடக்க கணினி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜீவ் கொடுத்த புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீசார் விரைந்து சென்று தடயங்களை சேகரித்ததுடன், அருகில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Related Stories:

>