நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்று பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதனால் 2024ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2025ம் ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தருவது அதிகரித்துள்ளது. மேலும் கனரக வாகனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளால் விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இது குறித்து குமரி மாவட்ட காவல்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 2025ம் ஆண்டில் மட்டும் 52 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் இருக்க போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி, பொதுமக்கள் கூடும் இடங்களில் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
மாவட்டத்தில் அனைத்து உட்கோட்டத்திலும் தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டு கஞ்சா வழக்கு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2025 ம் ஆண்டில் இதுவரை 281 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 153 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 592 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 612 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 2940 கிலோ குட்கா மற்றும் ரூ.5,95,751 மற்றும் 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
379 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 271 கடைகளுக்கு ரூ.70,65,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து ரூ.2 கோடியே 29 லட்சத்து 38 ஆயிரத்து 320 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கடந்த 2024ம் ஆண்டு 2 கூட்டுக்கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2025ம் ஆண்டில் கூட்டுக்கொள்ளை வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்பட வில்லை. கடந்த 2024ம் ஆண்டு செயின் பறிப்பு உள்ளிட்ட 46 வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2025ம் ஆண்டில் 6 வழிப்பறி வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. பழங்குற்றவாளிகள் கண்காணிப்பு தீவிர ரோந்து பணிகள், ஊர்காவல் கண்காணிப்பு திட்டம் மற்றும் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் போன்றவற்றால் இது சாத்தியமானது.
போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 4,65,000 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2025 ம் ஆண்டில் சட்ட விரோதமாக மது விற்றதாக 3193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3220 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1812.23 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டது. இணையத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆன்லைன் பண மோசடி தொடர்பாக 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் பண மோசடி தொடர்பாக இதுவரை ரூ.2,89,83,656 ரூபாய் மோசடி நபர்களின் வங்கி கணக்குகள் சைபர் கிரைம் போலீசாரால் முடக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.1,53,29,516 பாதிக்கப்பட்ட நபர்களுக்கு திரும்ப பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு 40 கொலைகள் பதிவாகிய நிலையில் 2025ம் ஆண்டில் 33 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2025 ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை, மக்கள் நல நடவடிக்கைகளை பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏதும் இன்றி குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தும், விபத்து மரணங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. பொதுமக்கள் வரும் 2026 ம் ஆண்டிலும் மாவட்ட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தில் 39 பேர் கைது
கடந்த 2025ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 39 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 868 பேர் மீது நன்னடத்தை பிணை வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் திருந்தி வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது. கனிமவளத் துறையின் அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தியதாக 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 238 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் நடவடிக்கையால் இந்த வருடத்தில் மட்டும் 1265 செல் போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் எஸ்பி ஒப்படைத்துள்ளார்.
பொதுமக்கள் உதவியுடன் 1473 சிசிடிவி கேமராக்கள்
அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி என்ற இலக்குடன் செயல்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிமுகப்படுத்திய ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் மூலமாக பொதுமக்கள் உதவியுடன் சுமார் 1473 சிசிடிவி கேமராக்கள் இதுவரை பொருத்தப்பட்டுள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் 11943 சிசிடிவி கேமராக்கள் குற்ற தடுப்பு கண்காணிப்புக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை 20,000 கேமராக்களாக அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
போக்சோ குற்றங்களை தடுக்கும் நிமிர் திட்டம்
மாவட்ட எஸ்பியால் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்களை தடுத்து போக்சோ குற்றங்கள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் பொருட்டு நிமிர் திட்டம், வெற்றிப்பாதை படிப்பகம் மற்றும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் திறப்பு, கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக சுற்றுலா ரோந்து தொடங்கி வைப்பு என பல திட்டங்களை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
