×

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி, ஜன.26: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற  இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகா கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி இலக்கியம்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. மேலும், 100 சதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்ட பணியாளர்களுக்கான ரங்கோலி கோலப்போட்டியை கலெக்டர் கார்த்திகா நேரில் பார்வையிட்டார்.

இதையடுத்து, தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சிறப்பாக பணியாற்றிய 5 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் 100 சதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார். மேலும், புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டையினையும் வழங்கினார். தொடர்ந்து வாக்காளர் தின உறுதிமொழியினை அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் தணிகாசலம், உதவி ஆணையர்(கலால்) தேன்மொழி, உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) சீனிவாச சேகர், தாசில்தார் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Voter Day Awareness Rally ,
× RELATED தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி