×

போலீசாரின் தடைகளை தகர்த்தெறிந்து திருவாரூரில் பூண்டிகலைவாணன் தலைமையில் டிராக்டர் பேரணி

திருவாரூர், ஜன. 27: திருவாரூரில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் போலீசாரின் தடைகளை தகர்த்தெறிந்து டிராக்டர் பேரணியானது நடைபெற்றது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நேற்று நாடு முழுவதும் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். திருவாரூர் மாவட்டத்தில் இந்த பேரணியானது நடத்துவதற்கு ஏற்கனவே அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு முடிவு செய்திருந்த நிலையில் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கிருந்து ரயில் நிலையம் நோக்கி டிராக்டரில் பேரணியாக சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தெரிவித்தப் பட்டிருந்தது. இதனையொட்டி நேற்று திருத்துறைபூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை ,நீடாமங்கலம் ,வலங்கைமான், குடவாசல், நன்னிலம் மற்றும் திருவாரூர் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் தங்களது டிராக்டர்களில் புறப்பட்ட நிலையில் ஆங்காங்கே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அதன் சாவிகளை பிடுங்கினர். இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் கொரடாச்சேரி யிலிருந்து இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏக் தலைமையில் 200க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் அங்கிருந்து புறப்பட்டு 20 கிமீ தூரத்தை கடந்து பேரணியாக திருவாரூர் வந்தடைந்தது. அங்கு விளமல் அருகே நகருக்குள் அந்த டிராக்டர்களை விடாமல் போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்தனர்.

ஆனால் அந்த தடுப்புகளை விவசாயிகள் தங்களது டிராக்டர்கள் மூலம் மோதி தள்ளியதால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி துரை, பூண்டி கலைவாணனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது டிராக்டர்களை பேரணிக்கு அனுமதிக்க வேண்டும் என திட்டவட்டமாக பூண்டி கலைவாணன் தெரிவித்ததையடுத்து பின்னர் போலீசார் அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பூண்டி கலைவாணன் தலைமையில் புறப்பட்ட விவசாயிகள் 2 கிமீதொலைவில் உள்ள ரயில் நிலையத்திற்கு டிராக்டர்களுடன் வந்தடைந்தனர். பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பூண்டி கலைவாணன், காவல்துறையினர் தங்களது கடமைகளை செய்தனர். ஆனால் விவசாயிகள் தங்களது உரிமையை நிலைநாட்டுவதற்காக பேரணியை நடத்தினர். எனவே விவசாயிகள் போராட்டத்தை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என போலீசாருக்கும் அரசுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன் மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் மாசிலாமணி, கலியபெருமாள், வீராதேசபந்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி வேதை சாலை ரவுண்டானா பகுதியிலிருந்து  திருவாரூருக்கு  டெல்லியில் நடைபெறும்  விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து 60 இருசக்கர வாகனங்கள், 35 டிராக்டர்களில்  தேசிய கொடியுடன்  விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சி விவசாய அமைப்புகள் பேரணியாக செல்ல போலீசார் அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். தடை மீறி விவசாயிகள் பேரணியாக புறப்பட்ட போது போலீசார் அவர்களை தடுத்ததால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை கண்டித்து நாகை பைபாஸ் சாலையில்  மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தாசில்தார் ஜெகதீசன்,  டிஎஸ்பி பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் முன்னாள் எம்எல்ஏக்கள் பழனிச்சாமி, உலகநாதன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர்,  மற்றும் விவசாய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கச்சனம் வரை சென்று பேரணியை முடித்துக்கொள்வதாக தெரிவித்து மீண்டும் பேரணியாக கச்சனம் சென்றனர். அதற்கு முன்பு பல பகுதிகளிலில் இருந்து வந்த டிராக்டர், இருசக்கர பேரணியைஅங்கு சாலையில் போலீசார் வாகனம் மற்றும் தடுப்பு கம்பிகளை தூக்கி எறிந்து பேரணியை விவசாயிகள் தொடர முயன்றதால் போலீசாருக்கும் அவர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் விவசாய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பேரணி தொடரும் என்றும் அனுமதி வழங்கும் வரை இந்த இடத்தைவிட்டு செல்லமாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்து சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Tractor rally ,Thiruvarur ,Poondikalaivanan ,
× RELATED திருவாரூர் தொகுதி வாக்குபெட்டிகள்...