×

டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தடை மீறி பேரணி போலீசாருடன் விவசாயிகள் தள்ளுமுள்ளு

தஞ்சை, ஜன.27: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தஞ்சாவூரில் போலீசாரின் தடையை உடைத்து பேரணியை விவசாயிகள் வெற்றிகரமாக நடத்தினர். பேரணியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது போலீசாருக்கும்- போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் உருவானது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மக்களுக்கு எதிரான மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் பாதித்த மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியும் இதற்காக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழகம் முழுவதும் குடியரசு தினமான நேற்று டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக டிராக்டர் பேரணி நடத்த போலீசாரிடம் அனுமதி கோரினர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததோடு, பேரணியில் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்றுவரை கிராமங்களில் உள்ள டிராக்டர்களை தஞ்சாவூருக்கு வர விடாமல், அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் கண்காணித்து, விவசாயிகளை எச்சரித்து வந்தனர். மேலும் மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் 30 இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வந்தனர். இதில் போராட்டத்திற்கு வந்த டிராக்டர்கள் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் தஞ்சாவூர் மேலவஸ்தாச்சாவடி என்ற இடத்தில் ஒன்று கூடினர்.

அப்போது டிஎஸ்பிக்கள் ஜெயச்சந்திரன், சீதாராமன், பாரதிராஜன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகன பேரணி நடத்த அனுமதி இல்லை என்றனர். ஆனால் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சுமூக உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. பின்னர் நான்கு டிராக்டர்களையும், ஒரு மாட்டு வண்டியையும் போராட்டக்காரர்களும் கொண்டு வந்து அதில் ஏறி பேரணியை துவக்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனத்தில் போராட்டக்காரர்கள் பேரணியாக வந்தனர். பேரணி துவங்கிய 100 மீட்டர் தூரத்தில் போலீசார் டிராக்டர், இரு சக்கர வாகனங்களை மறித்தனர். ஆனால் தடையை மீறி போராட்டக்காரர்கள் பேரணியை தொடர்ந்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த போராட்டத்தில் இறுதியாக போராட்டகாரர்கள் போலீசாரின் தடையை மீறி பேரணியை நடத்தினர்.

சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை பேரணியாக வந்ததும், மீண்டும் போலீசார் தங்களுடைய வேன் மற்றும் ஜீப்புகளை கொண்டு வந்து சாலையின் குறுக்கே நிறுத்தி பேரணியை மறித்தனர். அப்போதும் போராட்டக்காரர்கள் போலீஸார் வாகனங்களை தள்ளிவிட முயன்றதும், உடனே வாகனங்கள் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் சுமார் 3 கி.மீட்டர் தூரம் சென்று புதிய பேருந்து நிலையத்தில் போராட்டத்தினை முடித்துக் கொண்டனர்.
எம்எல்ஏக்கள் பங்கேற்பு: போராட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், எம்.ராமச்சந்திரன், டிகேஜி.நீலமேகம், சிபிஐ மாவட்ட செயலாளர்கள் பாரதி, முத்து.உத்திராபதி, சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி, திராவிடர் கழக மாநில பொதுச் செயலாளர் ஜெயக்குமார், ஒரத்தநாடு குணசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரைமாணிக்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் டிராக்டர் ஓட்டியபடி பேரணியில் பங்கேற்றார். போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Delhi ,
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு