ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவுக்கு அனைத்து பேருந்துகளும் சென்னை சென்றதால் பயணிகள் கடும் அவதி

பேராவூரணி, ஜன.27: சென்னையில் இன்று நடைபெறும் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிமுக தொண்டர்களை அழைத்துச் செல்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். கொரோனா காலத்தில் பொதுமக்கள் அதிகமாக கூட வேண்டாம் எனவும், பள்ளி, கல்லூரிகள், திறப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், வழிபாட்டு தலங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை விதித்துள்ள அரசு, ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் அதிக அளவு கூட்டம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சென்னைக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் மூலம் உத்தரவிட்டதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை மதியத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு, அதிமுக தொண்டர்களை அழைத்துச் செல்வதற்காக ஒவ்வொரு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இன்று புதன்கிழமை முகூர்த்த தினமானதால் திருமண நிகழ்ச்சிக்காக பல்வேறு இடங்களில் இருந்து முதல் நாளே புறப்பட்டு வந்தவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பேருந்துகள் இல்லாததால் கடும் அவதிப்பட்டனர். பேருந்துகள் இல்லாததால் ஆட்டோ, டாக்ஸிக்கு கூடுதல் செலவு செய்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

Related Stories: