சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மருத்துவ மாணவர்கள் 49வது நாளாக போராட்டம்

சிதம்பரம், ஜன. 27:  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்ட இங்கு, அரசு கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடக்கும் இந்த தொடர் போராட்டம் நேற்று 49வது நாளாக நீடித்தது. போராட்டம் நடந்த இடத்திலேயே நேற்று மாணவர்கள் குடியரசு தின விழாவை கொண்டாடினர். சிதம்பர ரகசியம் 2 என மிகப் பெரிய கோலம் வரைந்து போராட்ட பந்தலில் கடவுள் வாழ்த்து, தேசிய கீதம் பாடியும் குடியரசு தின விழாவை நடத்தினர்.  போராட்டம் குறித்தும், சிதம்பர ரகசியம் 2 என்பது குறித்தும் நிருபர்களுக்கு மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அரசு பல கோடி ரூபாய் நிதி வழங்கி வருகிறது. 2019 -2020ம் கல்வி ஆண்டில் மட்டும் 1044 கோடி தமிழக அரசு நிதி வழங்கி உள்ளது. இப்படி பல்கலைக்கழகத்திற்கு வரும் நிதியும், அது செலவாகும் விதமும் சிதம்பர ரகசியமாக இருக்கிறது.  2013ம் ஆண்டு புதிதாக இயற்றப்பட்ட அண்ணாமலை பல்கலைக் கழக சட்டப்படிதான் இந்த மருத்துவ கல்லூரி செயல்படுகிறது. இதில் எந்த இடத்திலும் சுயநிதி கல்லூரி என்று கிடையாது. மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா விதிகளின்படிதான் இந்த கல்லூரி செயல்பட்டு வருகிறது. பிற அரசு பல்கலைக் கழகங்களுக்கு வழங்கும் நிதியை விட இந்த பல்கலைக்கழகத்திற்கு பல மடங்கு நிதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்ற இந்த 7 வருடத்தில் ரூ.2075 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. ஆனாலும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற அனைத்துமே சிதம்பர ரகசியமாகத்தான் இருக்கிறது, என்றனர்.

Related Stories:

>