×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய இளைஞர்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும்

அறந்தாங்கி, ஜன. 27: அறந்தாங்கி வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம் ஆவணத்தான்கோட்டையில் நடந்தது. அறந்தாங்கி வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் குணவினாயகம் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஆலங்குடி எம்எல்ஏவும், அறந்தாங்கி வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான மெய்யநாதன் பங்கேற்று பேசியதாவது:திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 40 லட்சம் உறுப்பினர்கள் இளைஞரணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் அறந்தாங்கி வடக்கு ஒன்றியத்தில் 4,000 பேரும், ஆலங்குடி தொகுதியில் 10,000 பேரும் இளைஞரணியில் உறுப்பினராகி உள்ளனர். ஆலங்குடி தொகுதியில் சேர்ந்துள்ள 10,000 இளைஞரணி உறுப்பினர்களும், ஆளுக்கு 100 வாக்குகளை சேகரித்தால் அதுவே ஒரு லட்சம் வாக்குகளாக எளிதில் வென்று விடலாம். அதற்காக திமுக இளைஞரணியினர் தீவிரமாக கள பணியாற்ற வேண்டும். திமுகவில் உழைப்பவர்களுக்கு பதவிகள் தேடி வரும். தமிழகத்தில் அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 20 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் தான் பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகள் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற 100 நாள் வேலைக்கு செல்லும் அவலம் உள்ளது. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் அதிமுக அரசை தூக்கி எறிந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைய இளைஞர்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அறந்தாங்கி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்ட கவுன்சிலர் சரிதாமேகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Tags : MK Stalin ,DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...