*கொண்டாடி மகிழ்ந்த மாணவிகள்
விராலிமலை : பனை ஓலையில் குடில் அமைத்து, விறகு அடுப்பில் பொங்கல் வைத்து, முளைப்பாரி சுமந்து, கும்மியடித்து, குலவையிட்டு, விராலிமலை விவேகா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், மாணவ, மாணவிகள், பெற்றோர்களும் குதூகலத்துடன் கலந்து கொண்டதால், உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
விராலிமலை விவேகா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பள்ளி வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி பனை ஓலையில் குடில் அமைத்து 9 அடுப்புகளில் பொங்கல் பானை வைக்கப்பட்டு சமத்துவ பொங்கல் விழா பள்ளி நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் வெல்கம் மோகன் தலைமை வகித்தார். இயக்குநர் எம்.அருண் பிரசாத் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக விராலிமலை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கே.பி.அய்யப்பன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலகிருஷ்ணன், விராலிமலை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சி.தீபன் சக்கரவர்த்தி, எம்.முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் மற்ற பண்டிகைகள் போல ஒரு நாள் விழா அல்ல. பொங்கல் விழா நான்கு நாட்கள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது என்று விழாவின் மகத்தும் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறி மகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் உற்சாகமாய் பங்கேற்று ஆடல், பாடல், கோலாட்டம், சிலம்பம் சுற்றுதல், உறியடித்தல், வில்லுப்பாட்டு, ட்ரம் செட் வாசித்தல் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாகமாய் பொங்கல் விழாவை கொண்டாடி தீர்த்தனர்.
ஏற்பாடுகளை மேலாளர் ஓ. மதனகோபால் உள்ளிட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர் முடிவில் தலைமையாசிரியர் கவிதா நன்றி கூறினார்.

