×

நாகர்கோவிலில் 72வது குடியரசு தின கொண்டாட்டம் 63 போலீசாருக்கு முதல்வர் காவலர் பதக்கம்

நாகர்கோவில், ஜன.27: குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாட்டின் 72 வது குடியரசு தின கொண்டாட்டம்  நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட அவர் திறந்த ஜீப்பில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். எஸ்.பி பத்ரிநாராயணன், அணிவகுப்பு படை தலைவர் இன்ஸ்பெக்டர் மரியகிளாட்சன் ஜோஸ் ஆகியோரும் திறந்த ஜீப்பில் உடனிருந்தனர். பின்னர் சிறப்பாக பணியாற்றிய போலீசார் 63 பேருக்கு முதலமைச்சர் காவலர் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து நடந்த போலீசாரின் அணிவகுப்பில் ஆயுதப்படை போலீசாரின் பேண்ட் வாத்திய இசைக்குழு ஆல்பர்ட்ராஜ் தலைமையில் ஆயுதப்படை எஸ்ஐ ஜெயராமன், சிறப்பு எஸ்ஐ கோபி, எஸ்ஐ செந்தில்வேல், சிறப்பு எஸ்ஐ மதுசூதனன், ஊர்காவல்படைக்கு லெஸ்லி, வில்சன், கவிதா ஆகியோர் தலைமை வகித்து படைகளை வழி நடத்தினர்.

 பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் 34 பேரை பாராட்டி அவர்களுக்கு நற் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். கலெக்டர், எஸ்.பி.யுடன் முதல்வர் பதக்கம் பெற்ற போலீசார், சான்றிதழ்கள் பெற்ற அரசு பணியாளர்கள் உள்ளிட்டோர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கூடுதல் கலெக்டர் மெர்சி ரம்யா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சப் கலெக்டர் சரண்யா அறி, பயிற்சி கலெக்டர் ரிஷாப், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் ஆர்டிஒ மயில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி, கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ், கலெக்டரின் தாயார் சந்திரா மாணிக்கவாசகம், மனைவி கிருத்திகா, மகன் சிரேஷ், மகள் மகிமா, எஸ்.பி.யின் மனைவி அஸ்வினி, மகள் அக்ஷரா உட்பட பல்வேறு அரசு துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மயங்கி விழுந்தவரால் பரபரப்பு
குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்த வேளையில் ஒருவர் அண்ணா விளையாட்டு அரங்கம் எதிரே திடீரென்று மங்கிய விழுந்தார். அவர் மணலியை சேர்ந்த வின்சென்ட் என்பது தெரியவந்தது. மனோதங்கராஜ் எம்.எல்.ஏ பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து மணலியில் இருந்து சைக்கிள் பயணமாக குடியரசு தினவிழாவிற்கு வருகை தந்தார். அவருடன் வந்த வின்சென்ட் சிறிது தூரம் வந்ததும் தளர்வடைந்த நிலையில் பின்னர் அவர் காரில் ஏறி வருகை தந்தார். அண்ணா விளையாட்டு அரங்கம் வந்த பின்னர் காரில் இருந்து இறங்கி மைதானத்திற்கு செல்ல முயன்றபோது அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓட்டுநர்களுக்கு தங்க பதக்கம்
குடியரசு தினவிழாவில் தொடர்ந்து 20 ஆண்டுகள் விபத்தின்றி பணியாற்றிய ஓட்டுநர்கள் ராஜாக்கமங்கம் ஊராட்சி ஒன்றியம் செல்வகுமார், திருவட்டார் ஒன்றியம் வரதராஜ், கிள்ளியூர் ஆல்பர்ட்ராஜ், முன்சிறை சாலமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தரன்பிள்ளை, மேல்புறம் ஒன்றியம் ஜோதிகுமார் ஆகியோருக்கு தங்க பதக்கத்தை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். மேலும் 10 வருட அப்பழுக்கற்ற பணி முடித்தமைக்காக ரூ.500 மதிப்புள்ள சிறுசேமிப்பு பத்திரம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவு ஓட்டுநர் செந்தில்வேல், வருவாய் துறையை சேர்ந்த முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகள் இல்லை
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக குடியரசு தின விழாவையொட்டி நடைபெறுகின்ற பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நேற்று இடம் பெறவில்லை. போலீசாரின் அணிவகுப்பு மரியாதையில் வழக்கமாக இடம் பெறுகின்ற என்சிசி பிரிவு அணியினர் இந்தமுறை பங்கேற்க வில்லை. அதனை போன்று பொதுமக்களும் பெருமளவில் விழாவில் கலந்து கொள்ளவில்லை. காவல்துறையினர் அவர்களது குடும்பத்தினர், அரசு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் பெருமளவில் வருகை தந்திருந்தனர்.

Tags : Chiefs ,Nagercoil 72nd Republic Day Celebration ,Police Medal for Police ,
× RELATED சட்டத்தில் உள்ள குறைகளை சரிசெய்ய...