×

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகள்

நாகை, ஜன. 27: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மின்சார திருத்த மசோதா 2020ஐ திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் நாகை புத்தூர் ரவுண்டானாவில் இருந்து டிராக்டர், இருசக்கர வாகனத்தில் நேற்று பேரணியாக கலெக்டர் அலுவலகம் சென்று மனு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதையடுத்து நாகை புத்தூர் ரவுண்டானாவில் ஏடிஎஸ்பி முருகேஷ் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரவுண்டானாவின் 4 பகுதிகளில் இருந்து வரும் சாலைகளின் நடுவில் போலீசார் லாரிகளை நிறுத்தியும், கலவர தடுப்பு வாகனம், ஈகிள் கண்காணிப்பு வாகனம், இரும்பு தடுப்பு கட்டைகளை அமைத்திருந்தனர். மேலும் புத்தூர் ரவுண்டானா நோக்கி வந்த டிராக்டர்களை அங்காங்கே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் நாகை எம்பி செல்வராசு, எம்எம்ஏ மதிவாணன், திமுக மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், துணை செயலாளர் மனோகரன், கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வாஎடிசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நாகைமாலி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாவட்ட கவுன்சிலர் சரபோஜி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் புத்தூர் ரவுண்டானா பகுதியில் திரண்டனர். அப்போது பேரணியாக செல்லவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதியில்லையென பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரும் போராட்டம் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை.இதனால் போராட்ட குழுவினர், கிழக்கு கடற்கரை சாலையில் மறைவில் இருந்து கொண்டு வந்த டிராக்டரில் ஏறி பேரணியாக புறப்பட்டனர். இதனால் எதிரே வந்த லாரிகள், தங்களது ஜீப்புகளை சாலையின் குறுக்கே நிறுத்தி டிராக்டர்களை பேரணியாக செல்லவிடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்ட குழுவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே தடைகளை மீறி போராட்ட குழுவினர் சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதன்பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : Office ,Naga Collector ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...