×

கோயில்களில் தைப்பூச விழாவிற்கு வரும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து தரிசனம் செய்ய வேண்டும்

கரூர், ஜன. 27:கரூர் கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தைப்பூச விழாவிற்கு குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில், வெண்ணைமலை முருகன் கோயில், மற்றும் பாலமலை முருகன்கோயில் உட்பட அனைத்து கோயில்களுக்கும் வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கொரனோ நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுவான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள இடங்களில் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். பக்தர்களின் உடல் வெப்பநிலையை கண்டறிய வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்த பின்னர்தான் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும். பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாதைகள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் ஒலி, ஒளி பதிவுகளை இடைவிடாமல் ஒளிப்பரப்ப வேண்டும்.கோயிலில் பஜனைக்குழு, பக்தி இசைக்குழு போன்றவைகளை நேரில் பாட அனுமதிக்க கூடாது. மாறாக பதிவு செய்யப்பட்ட பக்தி இசை, பக்தி பாடல்கள் ஒலிக்கலாம்.

கோயில் வளாகத்தை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். குறிப்பாக, கழிவறைகள், கை மற்றும் கால் கழுவும் இடங்கள் சுத்தமாக பராமரிக்க வேண்டும். கோயில் உட்புறம் மற்றும் சுற்று பிரகாரங்களில் 1 சதவீதம் சோடியம் ஹைபோகுளோரைடு கரைசல் 3மணி நேரத்துக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.பக்தர்கள் விட்டுச் சென்ற பொருட்களை பாதுகாப்பாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். காவல்துறையினர் கோயில்களுக்கு வரும் அனைத்து பக்தர்களையும் நெறிப்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கவும், கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடுகள் செய்து, அதிக பக்தர்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பக்தர்கள் உட்பட அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்து செல்ல வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Devotees ,ceremony ,temples ,darshan ,Corona ,
× RELATED தேர்தல் நடத்தும் அலுவலர்...