×

டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக கோவில்பட்டியில் விவசாயிகள் வாகன பேரணி, ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, ஜன. 27:டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவில்பட்டியில் விவசாயிகள் வாகன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கைவிடக்கோரியும், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கோவில்பட்டியில் வாகன பேரணி, ஆர்ப்பாட்டம் நடந்தது. காந்தி மைதானத்தில் தொடங்கிய பேரணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் நல்லையா தலைமை வகித்தார்.முக்கிய வீதிகள் வழியாக டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்ற விவசாயிகள், வேளாண் திருத்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். 2019-2020க்கான பயிர் இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும். நடப்பு பருவத்தில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியவாறு சென்றனர்.தொடர்ந்து பழைய பஸ்நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் மணி, பொருளாளர் ராமசுப்பு, மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன், ஏஐடியுசி மாநில துணைத்தலைவர் தமிழரசன், ஐஎன்டியுசி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகரன், செயலாளர் பழனிச்சாமி மற்றும் ரசல், பேச்சிமுத்து, அப்பாத்துரை, பரமசிவன், மாரிமுத்து, கணபதி, பொன்ராஜ், சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Kovilpatti ,Delhi ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!