மாடு விடும் விழாவில் போலீஸ் தடியடி 3 இடங்களில் காளைகள் முட்டி 48 பேர் படுகாயம் காட்பாடி அருகே பரபரப்பு

கே.வி.குப்பம், ஜன.27: காட்பாடி அருகே மாடுவிடும் விழாவில் போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்கலம் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாடு விடும் விழா நேற்று நடந்தது. இதில், காட்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 140 மாடுகள் பங்கேற்றன. தொடர்ந்து, விழாவினை சப்-கலெக்டர் காமராஜ் தொடங்கி வைத்தார். காட்பாடி தாசில்தார் பாலமுருகன் தலைமையிலான வருவாய் துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காட்பாடி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் லத்தேரி இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி உள்ளிட்ட 50ககும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் மிக குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குடியரசு தினம் என்பதால் விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பார்வையிட்டனர். இதில் காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிசிச்சை அளித்தனர்.

விழாவின் போது, தடுப்புகளை தாண்டி குவிந்த இளைஞர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர் . அப்போது, போலீசாரிடம் இளைர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.அணைக்கட்டு: வேலூர் தாலுகா கணியம்பாடி அடுத்த கீழ்வல்லம் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று காளைவிடும் விழா நடந்தது. கணியம்பாடி, பென்னாத்தூர், வேலூர், ஊசூர், அணைக்கட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 183 மாடுகள், வீதியில் சீறி பாய்ந்து ஓடியது. தொடர்ந்து விழா மதியம் 2 மணியளவில் முடிக்கப்பட்டது. இதில் மாடுகள் முட்டியதில் காயமடைந்த 18 பேருக்கு அங்கு முகாமிட்டிருந்த கணியம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும் படுகாயமடைந்த 2 பேரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல், வேலூர் அடுத்த அரியூரில் 74ம் ஆண்டு மாடு விடும் விழா நேற்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது. மதியம் 3 மணி வரை நடந்த இவ்விழாவில், அரியூர், அரியூர் குப்பம், ஊசூர், கோவிந்தரெட்டிபாளையம், காட்பாடி, லத்தேரி, குடியாத்தம், ஒடுகத்தூர், அணைக்கட்டு, சோழவரம், கணியம்பாடி, வாணியம்பாடி வெள்ளக்குட்டை, மேல்மொணவூர் என பல்வேறு இடங்களிலிருந்து 187 காளைகள் கலந்து கொண்டு களத்தில் சீறிப்பாய்ந்தன. இதில் மிக குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாடு விடும் விழாவுக்காக கொண்டு வரப்பட்ட காளைகளுக்கு ஊக்கமருந்து வழங்கப்பட்டுள்ளதா? என்பது உட்பட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்பட்டன. இதற்காக கால்நடைத்துறை மருத்துவர்கள் குழு அங்கு முகாமிட்டிருந்தது. மேலும் காளைகள் செல்லும் பாதைகளில் இருபுறமும் சவுக்கு தடுப்புகள் கட்டப்பட்டிருந்தன.

அதேபோல் கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் தனித்தனியாக ஆம்புலன்ஸ் வாகனங்களும், முதலுதவி குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 20 பேர் காளைகள் முட்டியதில் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்விழாவுக்காக இன்ஸ்பெக்டர் சுபா தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories:

>