×

கலெக்டர் தேசிய கொடி ஏற்றி வைத்தார் ₹2.49 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வேலூரில் குடியரசு தின விழா

வேலூர், ஜன.27: வேலூரில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் சண்முகசுந்தரம், தேசிய கொடியேற்றி வைத்து ₹2.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்திய குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேலூர் கோட்டை நுழைவு வாயிலில் உள்ள மகாத்மாகாந்தி சிலைக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். டிஆர்ஓ பார்த்தீபன், ஆர்டிஓ கணேஷ், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், தாசில்தார் ரமேஷ், மாநகர் நல அலுவலர் சித்ரசேனா உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவில் கலெக்டர் கலந்து கொண்டார். அவரை எஸ்பி செல்வகுமார், டிஆர்ஓ பார்த்திபன், ஆர்டிஓ கணேஷ் ஆகியோர் வரவேற்றனர். அங்கு காலை 8.10 மணிக்கு கலெக்டர் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதுடன், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்களை பறக்க விட்டார். பின்னர் எஸ்பி செல்வகுமாருடன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய 25 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார். மேலும் பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய ஆர்டிஓ கணேஷ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் காமராஜ், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் செல்வி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், மாநகர்நல அலுவலர் சித்ரசேனா, மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவா உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 203 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கினார். பல்வேறு துறைகளின் சார்பில் 24 பயனாளிகளுக்கு ₹2 கோடியே 48 லட்சத்து 90 ஆயிரத்து 567 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக விழாவில் நீர்மேலாண்மை திட்டத்தில் முதலிடம் பிடித்த வேலூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட விருதையும், சான்றையும் பொதுமக்கள் மத்தியில் கைகளில் ஏந்தி காண்பித்தார். தொடர்ந்து விளையாட்டு உட்பட பல்வேறு பிரிவுகளில் சிறந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காசோலைகள், சான்றிதழ்களை வழங்கினார். இவ்விழாவில் டிஐஜி காமினி, அதிகாரிகள், பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
வேலூர் மத்திய சிறை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி தேசிய கொடியேற்றி வைத்து சிறைக்காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றிக் கொண்டார். வேலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் வளாகத்தில் வடமேற்கு மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார், தேசிய ெகாடியேற்றி வைத்து தீயணைப்பு வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு கூடுதல் அலுவலர் (பொறுப்பு) சரவணன், உதவி மாவட்ட அலுவலர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநகராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் கமிஷனர் சங்கரன் தேசிய ெகாடியேற்றி வைத்து அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மண்டல துணை ஆணையர்கள், மாநகராட்சி பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். வேலூர் செஞ்சிலுவை சங்க வளாகத்தில் நடந்த விழாவில் மாவட்ட கிளை செயலாளர் பிடிகே மாறன் முன்னிலையில் செஞ்சிலுவை சங்க தலைவர் ஆடிஓ கணேஷ் தேசிய கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க மாவட்ட பொருளாளர் உதயசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட பார்வையற்றோர் பள்ளியில் சங்க தலைவர் மற்றும் ஆர்டிஓ கணேஷ் தேசிய கொடியேற்றி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து பொய்கை முதியோர் இல்லத்தில் தேசிய கொடியேற்றப்பட்டு அங்குள்ளவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.  வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் டீன் செல்வி தேசிய கொடியேற்றி வைத்து பாதுகாவலர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் செந்தாமரைக்கண்ணனும், இஎஸ்ஐ மருத்துவமனையில் கண்காணிப்பாளர் ஜெயகீதாவும் தேசிய கொடியேற்றி வைத்தனர். அதேபோல் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் அந்தந்த துறை அலுவலர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர்.

Tags : Collector ,Vellore ,celebrations ,Republic Day ,
× RELATED வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே...