அரசு அலுவலகங்கள் தற்காலிக இடமாற்றம் குடியாத்தத்தில்

குடியாத்தம், ஜன. 27: குடியாத்தத்தில் அரசு அலுவலகங்கள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்ட நிலையில் கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய 3 தாலுகாக்களை உள்ளடக்கி புதிதாக ஒரு வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இயங்கி வந்தது. மேலும் இந்த வளாகத்தில் இ-சேவை மையம், ஆதார் சேவை மையம், பதிவாளர் அலுவலகம், தனி தாசில்தார் அலுவலகம் ஆகியவையும் இயங்கி வந்தது. பல்வேறு அலுவலகங்கள் ஒரே இடத்தில் இயங்கி வருவதால் கடும் இட நெருக்கடி ஏற்பட்டது. மேலும் தற்போது உள்ள கட்டிடம் பழைய கட்டிடம் என்பதால் அவற்றை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை கடந்த மாதம் நடைபெற்றது.

இந்நிலையில், பழைய கட்டிடங்களை அகற்றுவதற்காக, அரசு அலுவலகங்கள் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாலுகா அலுவலகம் சந்தைப்பேட்டையில் உள்ள சமுதாய கூடத்திற்கும், இ-ேசவை மற்றும் ஆதார் ேசவை மையம் நகராட்சி அலுவலக வளாகத்திற்கும், தனிதாசில்தார் அலுவலகம் கொண்டசமுத்திரம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்திற்கும், பதிவாளர் அலுவலகம் தங்கம் நகரில் உள்ள தனியார் கட்டிடத்திற்கும், கோட்டாட்சியர் அலுவலம் தற்போதைய தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மற்றொரு கட்டிடத்திற்கும் நேற்றுமுன்தினம் மாற்றம் செய்யப்பட்டது. எனவே, பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களையும் மாற்று இடங்களில் செயல்படும் அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளிடம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>