×

2.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றினார் குடியரசு தின விழா கொண்டாட்டம்


திருவண்ணாமலை, ஜன.27: திருவண்ணாமலை எஸ்பி அலுவலக வளாக ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில், கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றினார். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், எஸ்பி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில், குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, ஆயுதப்படை மைதானம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மைதானத்துக்கு, காலை 8.05 மணியளவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி வந்தார். அவருக்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து, தேசிய கொடியை கலெக்டர் ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், ஆயுதப்படை மைதானத்தில் திறந்த ஜீப்பில் சென்றபடி போலீஸ் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்பி எஸ்.அரவிந்த் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். பின்னர், மூவண்ண பலூன்களையும், சமாதான புறாக்களையும் வானில் கலெக்டர் பறக்கவிட்டார். அதைத்தொடர்ந்து, 484 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ₹2.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக, விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டும் கலெக்டர் நலத்திட்டங்களை வழங்கினார்.

மற்ற நபர்களுக்கு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், பல்வேறு அரசு துறைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளில் சிறப்பாக பணியாற்றிய 191 பேருக்கு, பாராட்டு சான்றுகளை கலெக்டர் வழங்கி கவுரவித்தார். மேலும், சிறப்பாக பணிபுரிந்த 47 போலீசாருக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சுதந்திர போராட்ட தியாகிகளை நேரில் அழைத்து கவுரவிக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. தியாகிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று நினைவு பரிசுகள் வழங்கி அதிகாரிகள் கவுரவித்தனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. மேலும், விழாவில் பங்கேற்ற அனைவரும் முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை கடைபிடிக்கப்பட்டன. விழாவில், டிஆர்ஓ ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, ஏடிஎஸ்பி வனிதா, ஏஎஸ்பி கிரண்சுருதி, முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். செங்கம்: புதுபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் குடியரசு தின விழாவில் ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். உடன் பிடிஓக்கள் கிருஷ்ணமுர்த்தி, நிர்மளா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலனத்தில் தாசில்தார் எஸ்.வைதேகி தேசிய கொடியை ஏற்றினார். உடன் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுத்தலைவர் ராணி அர்ஜுனன் தேசிய கொடி ஏற்றி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு சான்று வழங்கி கவுரவித்தார். இதில் ஆணையாளர்கள் பிரகாஷ், ரபியுல்லா, ஒன்றியக்குழு துணைத் தலைவர் முருகையன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிரேமலதா ராஜசிம்மன், பாட்சா முருகன், காவுக்காரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் முன்னாள் ராணுவ வீரர்கள் நல அலுவலகத்தில் கேப்டன் லோகநாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உடன் முன்னாள் ராணுவ வீரர்கள்.

Tags : Sandeep Nanduri ,occasion ,Republic Day ,
× RELATED சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்!!