வட்டமலைகரை ஓடை அணையில் தேசிய கொடி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வெள்ளக்கோவில், ஜன.27:வெள்ளக்கோவில் அருகே உள்ள வட்டமலை கரை அணைக்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக  வட்டமலை கரை அணை பகுதியில் கையில் தேசிய கொடி ஏந்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் வட்டமலை ஓடையின் குறுக்காக,600 ஏக்கர் பரப்பளவில் 6050 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் 30 அடி உயரத்துக்கு கடந்த 1980ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது. அதன்பின், இரண்டு முறை மட்டுமே இந்த அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கடந்த 1985ம் ஆண்டு முதல் அணைக்கு தண்ணீர் வரத்து இன்றியும், பி.ஏ.பி பாசன தொகுப்பில் இருந்து உபரி நீர் திறக்க அரசாணை இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் அமராவதி ஆற்றில் இருந்து கால்வாய் வெட்டி தண்ணீர் வழங்க திட்டம் போடததாலும் கடந்த 35 ஆண்டுகளாக அணை வறண்டு உள்ளது. இந்த அணைக்கு தண்ணீர் விடக்கோரி கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் பல்வேறு அறவழி போராட்டங்கள் நடத்தியும், கடந்த 10 ஆண்டுகளில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிகையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று அணைக்கு அருகே உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றினர். பின்னர், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அங்கிருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் அணைக்கு கையில் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், அணைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் அணை பகுதியை சுற்றி உள்ள 10க்கும் மேற்பட்ட  கிராமங்களை சேர்ந்த சுமார் 500 மேற்பட்ட மக்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் இணைந்து ஊர்வலமாக சென்று பின் அணைப்பகுதி முழுவதும் மரகன்றுகளை நட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: