ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது

ஊட்டி, ஜன. 27: ஊட்டி அருகே தூனேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஊட்டி அருகே தூனேரி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 108 ஆம்புலன்ஸ் டிரைவராக தர்மராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 3 வாலிபர்கள் அந்த மருத்துவமனைக்கு சென்று, தங்களது நண்பர்கள் இருவர் பைக்கில் சென்றபோது விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது, தர்மராஜ், தன்னுடன் பணியாற்றும் ஆம்புலன்ஸ் அசிஸ்டெண்ட் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பணிக்கு வரவில்லை. எனவே, உங்களுக்கு வேறு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார். அதற்காக, போன் செய்துகொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது, 3 இளைஞர்களும், ‘‘எங்களது நண்பர்கள் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நீ போன் பேசிக் கொண்டிருக்கிறாயா?’’ எனக்கூறி ஆம்புலன்ஸ் டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில், டிரைவர் தர்மராஜ்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவர் தேனாடுகம்பை போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், டிரைவரை  தாக்கியது மொரக்குட்டி பகுதியை சேர்ந்த மகேஷ் (26), தூனேரி பகுதியை சேர்ந்த நந்தகுமார் (22), பிரவீன் (22) ஆகியோர் என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: