தர்பூசணி விலை அதிகரிப்பு

பொள்ளாச்சி, ஜன. 27:  பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு  ஆந்திரா தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. தமிழக பகுதியிலிருந்து வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.கடந்த ஆண்டில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெய்த கன மழையால், தர்பூசணி பெரும்பாலும் அழுகி அறுவடை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் துவங்கியுள்ளதால், ஆந்திர மாநில பகுதியிலிருந்து தர்பூசணி வரத்து உள்ளது. ஆனால் அந்த தர்பூசணிகள் சிறிய அளவில் இருப்பதால், வியாபாரிகளுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.இதனால், தற்பூசணிகளை கடந்த ஆண்டைவிட கூடுதல் விலைக்கு விற்பனை ெசய்ய வேண்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சிறிய அளவிலான தர்பூசணி இருந்தாலும்,  உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, உடுமலை,  வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து, வியாபாரிகள் நேரில் வந்து விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் கடந்த ஆண்டில் மொத்த விலைக்கு ஒருகிலோ தர்பூசணி ரூ.13 முதல் அதிகபட்சமாக ரூ.15வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டில் தமிழகத்திலிருந்து வரத்து குறைவால், தர்பூசணிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போதைய நிலவரப்படி மொத்த விலைக்கு ரூ.15க்கும், சில்லரை விலைக்கு ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், திருவண்ணாலை, திண்டிவனம் பகுதியிலிருந்து வரத்து ஓரளவு வந்தால் மட்டும், லாபம் கிடைக்கபெறும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: