வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு தொழிற்சாலைகளில் மஞ்சி உலர வைக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி, ஜன. 27: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில், மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மஞ்சி உலர வைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. தென்னையை மையமாகக் கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட மஞ்சி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. தேங்காய் மட்டையில் இருந்து மஞ்சி பிரித்தெடுக்கப்பட்டு வெயிலில் நன்கு உலர வைத்து அதில் இருந்து கயிறு, மிதியடி, மெத்தை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.  இங்கு தயாரிக்கப்படும் மஞ்சி பொருட்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாரில் இருந்து கயிறு உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும்போது அதில் இருந்து வெளியேறும் கழிவுகளில் இருந்து மஞ்சி கழிவு கட்டிகள் தயாரிக்கப்பட்டு அவையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மட்டும் சுமார் 3 முதல் 4 மாதங்கள் வரை நார் உலர வைக்க முடியாமல் உற்பத்தி பாதிக்கப்படும். கோடை காலங்களில் அதிக வெப்பம் நிலவும்போது, மஞ்சி உற்பத்தியும் அதிகரிக்கும்.

 கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழைக்கு பிறகு வடகிழக்கு பருவமழை பொழிவு இருந்தபோது, மஞ்சி உலர வைக்கும் பணி மிகவும் மந்தமாக காணப்பட்டது. மேலும், தொடர் பனிப்பொழிவால் மஞ்சியை உலர வைக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்தனர். இதனால் வெளியிடங்களுக்கு மஞ்சி ஏற்றுமதி குறைந்தது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில்,  தமிழகத்தில் மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி, புதுகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 40சதவீத தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். வடமாநிலங்களான பீகார், மத்தியபிரதேஷம், உத்திரபிரதேஷம், ஒரிசா போன்ற மாநிலங்களில் இருந்து சுமார் 60சதவீத தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.இப்படி பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளில் மட்டும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியிடங்களில் இருந்து வேலைக்காக வந்து செல்கின்றனர். இந்த ஆண்டில் பொங்கல் பண்டிகையையொட்டி, பல தொழிற்சாலைகளில் பணியாற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த  தொழிலாளர்கள் பலரும், கடந்த 13ம் தேதியன்று தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

மேலும், வடமாநில தொழிலாளர்கள் என சுமார் 60சதவீத தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு சென்றனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு, வெளியூர்களில் இருந்து பொள்ளாச்சியில் உள்ள தொழிற்சாலைகளில் மீண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, கடந்த ஒரு வாரமாக  வெயிலின் தாக்கம் அதிகமானதால்,  தொழிற்சாலைகளில் மஞ்சி உற்பத்தி மீண்டும்  சுறுசுறுப்பாக நடைபெறுகிறது. மேலும், சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது பனிப்பொழிவு குறைவால், தென்னை மட்டையிலிருந்து இயந்திரம் மூலம் மஞ்சி பிரித்தெடுத்து உலர்த்தும் பணி தீவிரமாக நடக்கிறது. பகல் மட்டுமின்றி இரவு நேரத்திலும் மஞ்சி உலர வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழைப்பொழிவு இல்லாமல் இருந்தால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மஞசி உற்பத்தி அதிகமாக இருக்கும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: